*தென்காசி மாவட்ட வன அலுவலர் தகவல்
தென்காசி : வனவிலங்குகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்க ‘யானை தோழர்கள் குழு’ தொடங்கப்பட்டுள்ளது என்று தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வன விலங்கு மனித முரண் உள்ள பகுதிகளில் மோதலை தணித்து வனவிலங்குகளையும், விவசாய நிலங்களையும் ஒரே நேரத்தில் பாதுகாக்க சமூக பங்கேற்பை உருவாக்கும் விதமாக யானை தோழர்கள் என்னும் குழு உருவாக்கப்படும்.
ஒவ்வொரு வன சரகத்திலும் அதிகபட்சமாக 4 நபர்கள் கொண்ட "யானை தோழர்கள் குழு அமைக்கப்படும். குழுவில் வன பணியாளர்களுடன் யானை நடமாட்டம் உள்ள பகுதி விவசாயிகள், வனவிலங்கு பாதிப்புக்குள்ளாகும் பகுதி விவசாய பணியாளர்கள், விவசாயிகள். வன விலங்கு மற்றும் வன ஆர்வலர்கள் இருப்பர். குழு உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வனக்குழு தீர்மனத்தின் அடிப்படையில் வழங்கப்படும். இந்த பணிகள் கிராம வனக்குழு மூலம் செயல்படும்.
வனசரக அலுவலர் அவர்களால் மேலாண்மை செய்யப்படும் யானைகள் வனத்திலிருந்து வெளியேறும் நாட்களில் மட்டுமே இக்குழு செயல்படும். இக்குழுவின் முக்கிய பணியாக வனத்தை விட்டு விவசாய நிலத்திற்க்கும் வரும் யானைகளை தப்பு குரல் எச்சரிக்கை (Drum Call Alerts) யானை வருகையை தப்பைபரையைக் கொட்டும் நடைமுறையை பின்பற்றவும், இரும்பு தட்டு, டின் பெட்டி போன்றவற்றை அடித்து பெரிய சத்தம் எழுப்பி அல்லது குழுவாக இசைக்கருவிகளில் தொடர்ந்து சத்தம் எழுப்பி யானை பயணத்தை மாற்றவோ, குழுவினர் ஒருங்கிணைந்து கூச்சல் போட்டு, விசில் அடித்து, சத்தம் எழுப்பி யானையை விவசாய நிலங்களில் இருந்து பாதுகாப்பான முறையில் வனத்திற்குள் அனுப்புவது. விவசாய நிலங்களுக்குள் செல்லும் யானைகளை எவ்வித துன்புறுத்தலும் இன்றி, மிக்க பாதுகாப்புடன் காட்டிற்குள் அனுப்புவது இக்குழுவின் பணி.
அத்துடன் காட்டு தீ தடுப்பிற்கும் இக்குழு உதவி புரியும். இக்குழுவினை செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் தென்பட்டால் இக்குழுவினை கலைக்க மாவட்ட வன அலுவலருக்கு முழு அதிகாரம் உண்டு. மனித-யானை மோதல் குறையும், வனத்தையும் வன விலங்குகளையும் பாதுகாப்பதில் சமூக பங்கேற்பு அதிகரிக்கும், வனவிலங்கு பாதுகாப்பு வலுப்படும். யானை மனிதமுரண் உள்ள வன பகுதி வன சரக அலுவலர்களால் யானை தோழர்கள் குழு துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


