Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏலக்காய் தோட்டத்தில் யானை தாக்கி முதியவர் பலி: சடலத்துடன் மறியல்

*கூடலூர் அருகே பரபரப்பு

கூடலூர் : கூடலூர் அருகே ஏலக்காய் தோட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார். அவரது சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் உள்ள நியூஹோப் தனியார் தோட்டத்தில் வசித்து வந்தவர் மணி (62), இவரது மனைவி சரளா(55),மகன் சதீஷ்(35).தனியார் தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மணி அதே தோட்டத்தில் தற்காலிக தொழிலாளராக பணிபுரிந்து வந்தார்.

பிளம்பிங் மற்றும் தோட்டக் காவல் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் ஏலக்காய் தோட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடும் பணிக்காக மணி மற்றும் துரை ஆகிய இருவரும் ஏலக்காய் தோட்டம் வழியாக சென்றுள்ளனர்.

அப்போது ஏலக்காய் தோட்டத்திற்குள் படுத்திருந்த காட்டு யானை ஒன்று திடீரென எழுந்து இவர்களை விரட்டியது. தப்பி ஓடிய இருவரில் மணியை காட்டு யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வனத் துறையிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காட்டு யானைகள் குடியிருப்புகள் அருகே சுற்றித் திரிவதை வனத்துறையினர் கண்காணித்து விரட்டுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து யானை தாக்கி உயிரிழந்த மணியின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல விடாமல் குடும்பத்தார் மற்றும் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் கூடலூர்- எல்லைமலை பிரதான சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் தொடர் தாக்குதலால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டுவதில் மெத்தனம் காட்டி வருவதாகவும்,அதனால் யானைகள் தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவதோடு மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருவதாகவும்,தேயிலை, காப்பி, ஏலக்காய் தோட்டங்களுக்குள் முகாமிட்டுள்ள யானையை அடர்வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும், அல்லது பிடித்துச் செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெய்சீலன் கலந்து கொண்டார்.

மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடையே போலீசார்,வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காட்டு யானையை அடர் வனப் பகுதிக்கு விரட்டவும், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து யானையை பிடிக்க அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், குடியிருப்பு பகுதிகளை ஒட்டி தெரு விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.தொடர்ந்து மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக உலக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.சுமார் ஐந்து மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.