Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய வீடுகளில் பயனற்று கிடக்கும் 20.60 கோடி மின்னணு சாதனங்கள்

நவீன மயமாகி விட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் எலக்ட்ரானிக் பொருட்களின் மோகம் மனிதர்களை முழுமையாக ஆட்கொண்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பது செல்போன் என்றால் அதுமிகையல்ல. சிறியவர், பெரியவர், வலியவர், எளியவர் என்று எந்த பேதமும் இல்லாமல் செல்போன் பயன்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிலமணி நேரம் தனது செல்போன் முடங்கி விட்டால், இந்த உலகமே தன்னிடமிருந்து விலகி நிற்பதாக கருதுவோரும் நம்மிடையே கணிசமாக உள்ளனர். இதை கருத்தில் கொண்டு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தினம் ஒரு மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தி வருவாயை பெருக்கி வருகிறது.

இது ஒருபுறமிருக்க இந்தியர்களின் வீடுகளில் பயன்படுத்தாத நிலையில் 20 கோடி மொபைல் போன்களும், லேப்டாப்களும் கிடக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்திய செல்லுலர் மற்றும் மின்னணு சங்கத்தின் (ஐசிஇஏ) தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘அக்சன்சர்’ அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், இந்தியர்களின் வீடுகளில் மொத்தம் 20.60 கோடி மின்னணு சாதனங்கள் பயனற்று கிடக்கின்றன. இவற்றில் மொபைல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன உலகில், பலரது வீடுகளில் நான்கு அல்லது ஐந்து லேப்டாப்கள் அல்லது மொபைல்போன்கள் உள்ளன. மூன்று ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு மொபைல்போனில் சிறு பழுது ஏற்பட்டால் உடனே அதற்கு பதிலாக புதிய மொபைலை வாங்கும் போக்கு மக்களிடம் பொதுவாக உள்ளது. மேலும் சந்தையின் சமீபத்திய வரவுகளை தேடிப்பிடித்து வாங்கும் மனநிலையும் மக்களிடம் அதிகமாக உள்ளது. இது மட்டுமன்றி முக்கிய ஆவணங்கள் பதிவு, பணப்பரிமாற்றம், அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கான தொடர்பு, பொழுதுபோக்கு என்று வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் செல்போன் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதனால் மக்கள் எப்போதும் தங்கள் செல்போனை நல்லமுறையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர்.

இதனால் தாங்கள் பயன்படுத்தும் செல்போன் பழுதானால் அதை சரி செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக புதிய செல்போன்கள் வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். லேப்டாப்புகள் மீதான ஆர்வமும் இதே நிலையில் தான் உள்ளது. ஆனால் லேப்டாப்போடு ஒப்பிடுகையில் செல்போன் மீதான ஆர்வமே மக்களிடம் அளவுக்கதிகமாக மேலோங்கி நிற்கிறது என்பதும் ஆய்வாளர்கள் கூறும் தகவல். இந்த வகையில் இந்தியர்களின் வீடுகளில் 20 கோடி மொபைல் போன்கள் பயனற்று கிடக்கின்றன என்ற தகவலும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க மின்னணு கழிவுகள் நமக்கும் நாட்டுக்கும் வருவாய் ஈட்டித்தரும் பொக்கிஷங்கள். இதைக் கொண்டு செய்யும் மறுசுழற்சி வணிகம், எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் கூற்றாக உள்ளது.

இது குறித்து இந்திய தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அவற்றை விற்பனை செய்யும் வணிகத்தில் இந்தியா பெரிய சந்தையாக உருவெடுக்க முடியும். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, இந்த துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மின்னணு சாதனங்களை பழுதுபார்ப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். இதன் பயனாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இச்சாதனங்கள் பழுதுபார்ப்பதற்காக இந்தியாவுக்கு வருகின்றன. அந்நிய செலாவணியை பெருக்க இந்த வணிகம் ஒரு நல்ல வாய்ப்பு.

கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்திற்கு அடுத்தபடியாக மின்னணு பொருட்களை தான் இந்தியா அதிக அளவு இறக்குமதி செய்கிறது. எனவே இதை கருத்தில் கொண்டு மின்னணு கழிவு மறுசுழற்சி வணிகத்தை இந்தியா பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஒரு கட்டத்துக்கு மேல் பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தில் 30 சதவீதம் மதிப்பை கூட்டுகிறோம் என்று அர்த்தம். ஏனெனில் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான மொபைல்போன்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் இன்றும் இறக்குமதி தான் செய்யப்பட்டு வருகின்றன.

கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்திற்கு அடுத்தபடியாக மின்னணு பொருட்களை தான் இந்தியா அதிக அளவு இறக்குமதி செய்கிறது. பிப்ரவரி 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த இறக்குமதி வர்த்தகம் 550 பில்லியன் டாலர்கள். இவற்றில் மின்னணு சாதனங்களின் பங்கு 62.7 பில்லியன் டாலர்களாகும். மின்னணு சாதனங்களின் இறக்குமதி நாட்டின் அந்நியச் செலாவணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மொபைல்போன் மற்றும் லேப்டாப்கள் பழுதுபார்க்கும் சந்தை இந்தியாவில் அதிகரித்தால், இவற்றின் இறக்குமதி குறைந்து, அதன் பயனாக நாட்டின் அந்நியச் செலாவணி சேமிக்கப்படும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.