திருவொற்றியூர்: சென்னை மணலி எஸ்ஆர்எப் நெடுஞ்செழியன் சாலை வழியாக கன்டெய்னர் லாரி சென்றது. திடீரென அங்குள்ள உயரழுத்த மின்கம்பி மீது அந்த லாரியின் மேல் பகுதி உரசியதால் மின்சாரம் பாய்ந்து லாரி தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவல்படி, மணலியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பாதி பாதிப்புடன் லாரி மீட்கப்பட்டது.‘’மணலி பகுதிகள் உள்ள சாலைகளில் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. இதன்காரணமாக அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. எனவே, இந்த பகுதியில் பூமிக்கு அடியில் மின் கம்பிகளை புதைக்க வேண்டும்’’ என்று வாகன ஓட்டிகள் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.