Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்த மின்கட்டண உயர்வை அரசு ஏற்க கூடாது: முத்தரசன், டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலுவாக எதிர்த்து வந்த உதய் மின் திட்டத்தில் எடப்பாடி அரசு கையெழுத்து போட்டு, அவரது கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்து, தமிழ்நாட்டு மக்களின் நலனை அடகு வைத்ததை தமிழ்நாடு ஒருபோதும் மன்னிக்காது.

உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் ஆண்டுக்கு 6 சதவீதம் அல்லது ஆண்டின் முடிவில் நிலவும் பணவீக்கம் இதில் எது குறைவோ, அந்த அளவில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின்கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது நிபந்தனையாகும். இதனால் கடந்த 2023ம் ஆண்டு 2.18 சதவீதமும், 2024ம் ஆண்டு 4.83 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 3.16 சதவீத மின்கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் ஏற்க இயலாதது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வால் ஏழை, எளிய சாமானிய மக்கள், வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் கடுமையாக பாதிப்படைந்து வரும் நிலையில், தற்போது மேலும் 3.16 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் மின்வாரியத்தின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.