Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வாங்க-விற்க பசுமை எரிசக்தி கழகத்திற்கு வர்த்தக உரிமம்: அதிகாரிகள் தகவல்

* மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் n உற்பத்தியாளர்கள்-நுகர்வோரிடையே இணைப்பு உருவாகும்

தமிழ்நாடு சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பிற புதுப்பிக்க தக்க எரிசக்தி ஆதாரங்களை குறிப்பிடத்தக்க அளவில் கொண்டுள்ளது. தற்போது புதுப்பிக்க எரிசக்தி திறனில் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.மின்சார வாகனங்கள், மின்சார மின்னூட்ட உட்கட்டமைப்பு, மின்கல ஆற்றல் சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன், உயிரி ஆற்றல் மற்றும் பிற சாத்தியமான ஆதாரங்களையும் ஆராயும் அதே வேளையில் மரபுசார் எரிசக்தி உற்பத்தியிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கு நமது மாநிலம் முன்னுரிமை அளிக்கிறது.

அந்தவகையில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த புதுப்பிக்க தக்க எரிசக்தி பிரிவும், எரிசக்தி மேம்பாட்டு முகமையும் இணைக்கப்பட்டு ‘தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம்’ என்ற புதிய அமைப்பின் கீழ் கடந்த 2024ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. இந்த கழகத்தின் முக்கிய குறிக்கோளாக புனல் மின்நிலையங்களின் பராமரிப்பு, மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி திறனை விரிவுபடுத்துதல், புதிய புனல் மின் திட்டங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்,

பெரிய அளவிலான சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கான முயற்சிகளை ஊக்குவித்தல், சூரிய மேற்கூரை மின் அமைப்புகளை நிறுவுவதற்கு ஆலோசனை வழங்குதல், உயிரி ஆற்றல் போன்ற பிற புதுப்பிக்கத்தக்க எரிபொருள் மூலங்களிலிருந்து ஆற்றல் உற்பத்தியை ஆதரித்தல், புதுப்பிக்க ஆற்றலின் பங்கை அதிகரிக்க ஒரு புதிய ஒங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையை உருவாக்குதல், மின் கட்டமைப்பின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் உகந்த தாக்கி பயன்படுத்துதல் மற்றும் பசுமை திட்டங்களை குறைந்த முதலீடுகளில் நிறுவுவதற்கு வழிவகை செய்தல் உள்ளிட்டவைகள் அடங்கும்.

இந்நிலையில் சூரிய சக்தி, காற்றாலை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின் விநியோக நிறுவனங்களுக்கு விற்கும் வணிகத்தில் பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட ஆயத்தமாகி உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தமிழகத்திற்குள் ஈடுபடுவதற்கான வர்த்தக உரிமம் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்கான ஒப்புதல் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எரிசக்தி கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

உலகம் முழுதும் புதுப்பிக்கத்தக்க மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மின் தேவையை பூர்த்தி செய்வதில், புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதுமாக பயன்படுத்தவும், முன்னுரிமை அளிக்கும் வகையிலும் மாநில மின் வாரியங்கள் செயலாற்றி வருகின்றன. நாட்டிலேயே, காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவுவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

குறிப்பாக, அடுத்த 5 ஆண்டுகளில் கார்பன் உமிழ்வை 70 சதவீதம் குறைப்பதை நோக்கமாக கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வசதிகளை அதிகளவில் நிறுவுவதற்கான திட்டங்களை அரசு வகுத்துள்ளன. இந்த முயற்சிகளினால், நிறுவுதல், பராமரிப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான கணிசமான வாய்ப்புகள் உருவாகின்றன.

இதனிடையே புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின் வாரியம் உள்ளிட்ட மின் விநியோக நிறுவனங்களுக்கு விற்கும் வணிகத்தில் ஈடுபடும் வகையில் கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ‘ஜி’ வகை உள்மாநில வர்த்தக உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தோம். தற்போது அதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளன. இதன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்களுக்கும், மாநில மின்பகிர்மான நிறுவனத்திற்கும் இடையே இடைத்தரகராக செயல்பட இந்த உரிமம் உதவும்.

இந்த உரிமத்தால் வருடந்தோறும் 500 மில்லியன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அலகுகளை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாநிலத்திற்குள் உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்களிடமிருந்து பசுமை மின்சாரத்தை பெற்று வர்த்தக கமிஷன் அடிப்படையில் மின்வாரியத்திற்கு விற்பனை செய்யலாம். மேலும், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் இடையே இணைப்பை உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

* 2030க்குள் பசுமை எரிசக்தியை 50% அதிகரிக்க இலக்கு

தமிழ்நாட்டில் மொத்த நுகர்வில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் பங்காக தற்போது 24% உள்ளது. தற்போது, இந்த சதவீதத்தை அடுத்து வரக்கூடிய 2030ம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து அரசு செயலாற்றி வருகின்றன.