கள்ளக்குறிச்சி: வாட்டர் சர்வீஸ் கடையில் மின்சாரம் பாய்ந்து 2 ஊழியர்கள் பலியானார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கலையநல்லூர் சாலையில் சாஜன் என்பவர் வாட்டர் வாஷ் கடை நடத்தி வருகிறார். இங்கு தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஷாகில் (17) உள்ளிட்ட பலர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அரவிந்த் நான்கு சக்கர வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென எதிர்பாராத விதமாக அரவிந்த் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஷாகில் உடனடியாக அரவிந்தை காப்பாற்றுவதற்காக அவரைபிடித்து இழுத்துள்ளார். இதனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அரவிந்த் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
ஷாகிலுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சக ஊழியர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ஷாகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

