மதுரை: மின்வாரிய அலுவலக சுற்றுச்சுவரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஏஐ போஸ்டர்கள் கவனம் ஈர்த்து வருகிறது. மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் மின் பகிர்மான உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் சுற்றுச் சுவரில் வடக்கிழக்கு பருவமழை போன்ற பருவ மழை காலங்களின் போது மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் பாதுகாப்பற்று அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் பொதுமக்கள் தொடுவதை தவிர்க்க வேண்டும், மின் கம்பங்கள் அருகே குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது, மழைகாலங்களில் மின் கம்பங்களைத் தொடக்கூடாது, சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும், இணைய வழி மோசடி அழைப்புகளை அழைப்புகளை தவிர்க்க வேண்டும், ஈரமான கைகளால் மின் சாதனங்களைத் தொடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு அம்சங்கள் அடங்கியுள்ளன. புதுவிதமான இந்த போஸ்டர்கள் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது. மின் வாரியத்தின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.


