ஈரோடு : கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக பணி மாற்றம் வழங்ககோரி ஈரோட்டில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (சிஐடியு) நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அந்த அமைப்பின் மண்டல செயலாளர் ஸ்ரீதேவி தலைமை தாங்கினார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் மாரப்பன், கிளை தலைவர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் இளங்கோ, ஜான்சன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில், கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பணி மாற்றம் வழங்க வேண்டும். 1-12-2019ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். டிஏ, ஜேஇ உள்முகத்தேர்வில் வாய்ப்பு வழங்க வேண்டும்.
சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் வழங்க வேண்டும். விடுபட்ட கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவினை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில், சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஸ்ரீராம், ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், மேட்டூர், கோபி பகுதிகளை சேர்ந்த அமைப்பின் நிர்வாகிகள், மின் வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.