*விழுப்புரத்தில் 235 பேர் கைது
விழுப்புரம் : மின் வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும். உழைப்பு சுரண்டலை தொடர்ந்து செய்து, அதன்படி தனியார் கம்பெனி மூலமாக ஆள்நிரப்ப திட்டமிடும் கொள்கை முடிவைகைவிட வேண்டும். மின்வாரியத்தில் காலி பணியிடம் 62 ஆயிரம் உள்ளது.
குறிப்பாக 35ஆயிரம் களப்பிரிவில் உள்ள பணியிடங்களை நிரப்பிட ஒப்பந்த ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
அதன்படி விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சிக்னல் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் அம்பிகாபதி, சிஐடியூ மூர்த்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் சேகர், திட்ட செயலாளர் அருள், திட்ட பொருளாளர் கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 235 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.