* கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை
கடந்த மாதம் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் புக் செய்யப்பட்டன
சென்னை: சென்னை - திருச்சி இடையே தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரண்டு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தாண்டுக்கான தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20ம் தேதி கொண்டாடப்படவுள்ளன. இதற்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் முன்கூட்டியே தங்களின் பயணத்திட்டத்தை உறுதி செய்யும் விதமாக விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை முன்பதிவு செய்துள்ளனர். அந்தவகையில் ரயிலில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கடந்த மாதம் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் புக் செய்யப்பட்டன. இதில் ஆன்லைன் மூலமாக பெரும்பாலானோர் முன்பதிவை செய்த நிலையில் ரயில் நிலையங்களில் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மதுரை, கோவை, குமரி உட்பட தென்மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே 11 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தன. இதற்கு அனுமதி கிடைக்கும் நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில் சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து இரண்டு மின்சார ரயில்களை (மெமு) திருச்சி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தீபாவளி பண்டிகைக்கு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தகுந்த இடவசதிகளை ஏற்படுத்தி தரும் நடவடிக்கைகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.