சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார் (45), ரவிக்குமார் (47). இருவரும் கடந்த 31ம் தேதி சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் நடந்த திருமணத்திற்கு சென்றனர். முதல்நாள் இரவே வந்து கோயில் மண்டபத்தில் தங்கியிருந்தனர். மறுநாள் அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் ெசன்றவர்கள் திரும்பி வரவில்லை.
இந்நிலையில், வேப்பிலைபட்டி அருகே உள்ள உறை கிணற்றில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘திருமணம் நடந்த கோயில் அருகே விவசாய தோட்டம் உள்ளது. இப்பகுதியில் இயற்கை உபாதைக்காக அதிகாலை 4 மணியளவில் சுரேஷ்குமாரும், ரவிக்குமாரும் சென்றனர்.
அப்போது காட்டுப்பன்றிகளை தடுக்க வைத்திருந்த மின்வேலியில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். காலையில் தோட்டத்திற்கு வந்த உரிமையாளர்களான மணிகண்டன்(45), சுதாகர்(42) ஆகியோர் மின்வேலியில் சிக்கி 2 பேர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது வெளியில் தெரிந்தால் பிரச்னையாகி விடும் என கருதி, இருவரது உடல்களையும் டூவீலரில் தூக்கிச் சென்று உறை கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். தற்போது 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.
