Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய வசதியாக ஊட்டியில் 63 கேவிஏ மின் மாற்றிகள் அமைப்பு

ஊட்டி : பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வை குறைத்து சுற்றுச்சூழல் மாசடைவதை குறைக்க எலக்ட்ரிக் வாகனங்கள் எனப்படும் மின்சார வாகனங்கள் பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. அதற்கேற்ப இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மின்சார வாகனங்களில் உள்ள முக்கிய பிரச்னை சார்ஜிங் நிலையங்கள், மின்சார வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்ல கூடிய நீலகிரி மாவட்டத்தில் போதுமான அளவு சார்ஜிங் நிலையங்கள் இல்லை. விரல் விட்டு எண்ண கூடிய அளவிற்கே உள்ளது. இதனால் எலக்ட்ரிக் வாகனங்களில் வர கூடிய சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சார்ஜ் செய்வதில் சவால்களை சந்திக்கின்றனர்.

இந்நிலையில் ஊட்டி நகரில் தற்போது எரிபொருள் நிலையங்கள் வைத்துள்ளோரும், சார்ஜிங் மையங்கள் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் போது மின் அழுத்த பிரச்னை உள்ளிட்டவைகள் ஏற்படாமல் இருக்கும் வகையில், மின்வாரியம் சார்பில் மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நீலகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில் ஊட்டி சேரிங்கிராஸ் மற்றும் ஹில்பங்க் என இரு இடங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மின்சார வாகனங்கள் சார்ஜிங் செய்து கொள்ளும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் விதமாக ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 63 கேவிஏ திறன் கொண்ட இரு மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன.

இதை மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி, செயற்பொறியாளர் சிவகுமார் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் மின்னூட்டம் செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.