Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின்சார மணி (Electric bell)

மின்சார மணி என்பது ஒரு மின்காந்த சாதனம். இது பள்ளிகளிலும், நிறுவனங்களிலும் அறிவிப்பு செய்யவோ, யாரையாவது அழைக்கவோ பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் புகைவண்டிப்பாதையைக் கடக்கும் பாதைகளிலும், தீ மற்றும் திருட்டு தொடா்பான அறிவிப்பான்களாகவும் அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போதைய நிலையில் மின்சார மணியானது மின்னணுவியல் சாதனங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மின்சார மணியானது லாட வடிவ மின்காந்தம், அதைச்சுற்றிய கம்பிச்சுருள், ஒரு சாவி, மின்கல அடுக்கு, இரும்புப்பட்டை, மின்காந்தம், சுத்தியல், மணி இவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்சார மணியின் மின்சுற்றில், சாவி மூடப்பட்டிருக்கும்போது கம்பிச்சுருளின் வழியே மின்னோட்டம் பாய்கிறது. இதன் காரணமாக லாட வடிவச் சட்டம் மின்காந்தமாகிறது. அது இரும்புப்பட்டையை இழுக்கிறது. இச்செயலின் காரணமாக இரும்புப்பட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சுத்தியல் இழுக்கப்பட்டு அது மணியைத் தாக்கி ஒலியை உண்டாக்கும். மின்சாரமானது துண்டிக்கப்படும்போது கம்பிச்சுருளில் மின்னோட்டம் துண்டிக்கப்படுகிறது. மின்னோட்டம் துண்டிக்கப்பட்டதால் கம்பிச்சுருளில் மின்னோட்டம் செல்லாததால் லாட வடிவச் சட்டம் காந்தத்தன்மையை இழக்கும். இதன் காரணமாக இரும்புப்பட்டை பழைய நிலைக்குச் செல்லும். மின்சுற்றில் மீண்டும் மின்னோட்டம் பாயச்செய்யும்போது இரும்புப்பட்டை இழுக்கப்படும். அதைத் தொடா்ந்து சுத்தி இழுக்கப்படும். மணியானது சுத்தியால் தாக்கப்பட்டால் ஒலியைத் தரும். இச்செயல் மீண்டும் மீண்டும் நடந்து மணி தொடா்ந்து ஒலி எழுப்பும். இப்படித்தான் மின்சார மணியானது செயல்படுகிறது.

1823ம் ஆண்டில் வில்லியம் ஸ்டா்ஜன் என்பவரால் மின்காந்தமானது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடா்ந்து பல்வேறு விதமான மின்பொறியியல் சாதன அமைப்புகள் கொண்டு இத்தகைய மின்சார மணிகள் வடிவமைக்கப்பட்டன. அப்படிப்பட்ட அலைவுறும் மின்கம்பியை பிரதான பகுதியாகக் கொண்ட மின்சார மணி ஜேம்ஸ் மார்ஷ் என்பவரால் 1824ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய மின்சார மணியின் வடிவமைப்பானது துாண்டல் சுருள்களில் உள்ள முதன்மை மின் இணைப்பைத் துண்டிக்கும் அதிர்வுறக் கூடிய ‘தொடா்பு நீக்குதல் சாதனம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தவை ஆகும். இவ்வகை அதிர்வுறும் சுத்தியல் அமைப்பைக் கொண்ட மின்சார மணியானது ஜோஹன் பிலிப் வேக்னா் (1839) மற்றும் கிறிஸ்டியன் எா்ன்ஸ்ட் நீஃப் (1847) ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.