எந்த கவலையும் இல்லாமல் தேர்தல் பணியில் கவனம் செலுத்துங்கள் பாமகவும், சின்னமும் நம்மிடம்தான் உள்ளது: மாவட்ட செயலாளர்களுக்கு ராமதாஸ் தெம்பு
திண்டிவனம்: எந்த கவலையும் இல்லாமல் தேர்தல் பணியில் கவனம் செலுத்துங்கள். பாமகவும், சின்னமும் நம்மிடம்தான் உள்ளது என்று மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களிடம் ராமதாஸ் தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் அன்புமணியை கட்சியை விட்டே நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இந்நிலையில், கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றுவதில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும், மாம்பழம் சின்னம் தங்களுக்கே சொந்தம் எனவும் அன்புமணி தரப்பு செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்திருந்தார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ் தரப்பை சேர்ந்த அருள் எம்எல்ஏ தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் எந்த இடத்திலும் அன்புமணி கட்சி தலைவர் என்று குறிப்பிடவில்லை என கூறியிருந்தார். இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இப்படி இரண்டு தரப்பினரும் தேர்தல் கமிஷனில் மல்லுகட்டி வரும் சூழ்நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
பேராசிரியர் தீரன், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, அருள் எம்எல்ஏ, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கட்சியின் அடுத்தக் கட்ட செயல்பாடுகள், தேர்தல் பணி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசித்தார்.
பின்னர், ராமதாஸ் பேசுகையில், ‘வருகிற 2026ம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே தொண்டர்களை தயார்படுத்த வேண்டும். கட்சி, சின்னம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், நம்மிடம்தான் கட்சி சின்னம் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு அதற்கான தீர்வு காண்போம். எனவே, நிர்வாகிகள் சோர்வடையாமல் கட்சிப் பணியாற்ற வேண்டும். கூட்டணி குறித்து நான் முடிவு செய்து கொள்கிறேன். எனவே எந்த குழப்பமும் இல்லாமல் கட்சி பணியாற்ற வேண்டும்’ என்றார். இந்நிலையில் பாமக மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவராக இருந்த விருத்தாசலம் கோவிந்தசாமி மாற்றப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த முனிராஜ் என்பவரை அப்பதவிக்கு ராமதாஸ் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
* தேர்தல் ஆணையத்தில் நேரில் முறையீடு
பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும், மாம்பழம் சின்னம் தங்களுக்கே சொந்தம் என்றும் அன்புமணி தரப்பு கூறி வருகிறது. இதுசம்பந்தமாக முறையான ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் முறையிட பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர். நேற்று அவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரியை சந்தித்து, மனு அளித்தனர். அதில், அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது. முகவரி மாற்றம் பொய்யானது. அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். கட்சியின் தலைவராக அன்புமணியை அங்கீகரக்க கூடாது. பாமக மற்றும் மாம்பழம் சின்னம் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
* கிராமங்கள் தோறும் ராமதாஸ் விரைவில் சுற்றுப்பயணம்
பாமக இணை பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ கூறுகையில், ‘பெண்னாகரத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பயணத்தை ராமதாஸ் தொடங்க இருக்கிறார். ஒவ்வொரு தொகுதிகளிலும் 3 கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளார். டிசம்பர் வரை கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து இன்றைய கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. ராமதாஸ் உள்ள கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். வெற்றி கூட்டணியை ராமதாஸ் அமைப்பார். பாமக என்பது ராமதாஸ் மட்டுமே, அவர் தலைமையில் உள்ளதுதான் பாமக. பாமகவுக்கு தேர்தல் ஆணையம் அநீதி இழைக்கவில்லை.
ஒன்றிய, மாநில கட்சிகளோடுதான் பாமக கூட்டணி வைக்கும். யாருடைய தலையீடும் இல்லாமல் ராமதாஸ் கூட்டணி வைக்க இருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி என்பது இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அதனை ராமதாஸ்தான் முடிவு செய்வார். அவருக்குதான் கூட்டணி அமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாமகவின் பொதுக்குழு மீண்டும் டிசம்பரில் கூட்டப்படும்’ என்றார். அன்புமணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், ராமதாஸ் கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது, பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.