சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையில் உள்ளது சேவகானப்பள்ளி ஊராட்சி. இங்குள்ள சிச்சிறுக்கானப்பள்ளி கிராமத்தில், பிரபல தனியார் நிறுவனத்தின் பேட்டரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நேற்று காலை முதல் இரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்த பேட்டரி தொழிற்சாலை ஓசூர் பகுதியில் இயங்குவது போல மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இயங்கி வருகிறதாக கூறப்படுகிறது. அந்த தொழிற்சாலைகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனை தொடரும் என்ற தகவலும் கசிந்துள்ளது. இதற்கிடையே பீகார் தேர்தல் எதிரொலியாக இந்த சோதனை நடந்தது என்றும், இதற்கு ஒன்றிய அரசின் அழுத்தமே காரணம் என்றும் தகவல்கள் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் பேட்டரிகள் தயார் செய்து விற்பனை செய்யும் டாப்-10 நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனத்திடம் இருந்து பீகார் தேர்தலுக்கு நன்கொடை கேட்டு சிலநாட்களுக்கு முன்பு, என்டிஏ கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால் நிர்வாக தரப்பில் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே ஒன்றிய அதிகாரிகள் குழுவினர், இங்கும், இதர மாநிலங்களிலும் இந்நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். ஒன்றிய பாஜ அரசு கொடுத்த அழுத்தமும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறோம்,’’ என்றார்.
 
  
  
  
   
