தேர்தலில் நிற்பதற்கு கூட வலுவில்லாத எடப்பாடியின் தலைமையை ஏற்று யாரும் கூட்டணிக்கு வரவில்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
சென்னை: அம்பத்தூரில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ள பொது மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சி அமைந்த பிறகு மக்கள் கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஒரு இயக்கமாக செயல்பட்டு வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து 6 முறை பங்கேற்று 20,000 பேருக்கு மேல் பட்டா வழங்கியுள்ளார். அந்த வகையில் அம்பத்தூர் ராமசாமி பள்ளியில் வரும் 25ம் தேதி 6000 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. இதற்காக அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
பட்டா வழங்கப்படும் 25ம் தேதி, நிகழ்ச்சிக்கு வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகன நிறுத்தம், தண்ணீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளோம். எனவே இந்த பட்டா வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். தேர்தலில் நிற்பதற்கு கூட வலுவில்லாத கட்சியினர் தவெக கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று தான் கூறுகின்றனர். அதனால் யார் நினைத்தாலும் 2026ம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று யாரும் கூட்டணிக்கு வரவில்லை. அதனால், அவர் கூவி கூவி கூட்டணிக்கு எல்லோரையும் அழைக்கிறார். திமுகவினரை ஊழல்வாதிகள் என கூறும் ஆதவ் அர்ஜூனா ஏர் கலப்பை பிடித்து பணம் சம்பாதிப்பவரா. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் பகுதி செயலாளர் எம்.டி.ஆர். நாகராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.