Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் நடைமுறைகள் நேற்று தொடங்கிய நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல்; மல்லுகட்டும் பாஜக - ‘இந்தியா’ கூட்டணி: பாஜகவின் துருப்புச்சீட்டு யார்? எதிர்க்கட்சிகளின் தேர்வில் நீடிக்கும் மர்மம்

புதுடெல்லி: உடல்நலக் காரணங்களால் ஜெகதீப் தன்கர் பதவி விலகியதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தங்களின் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர், உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி கடந்த ஜூலை 21ம் தேதி அன்று தனது பதவியை துறந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 68(2)வது பிரிவின்படி, குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் ஏற்படும் வெற்றிடத்தை, அடுத்த 60 நாட்களுக்குள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நிரப்ப வேண்டும். இதனையடுத்து, இந்தியத் தேர்தல் ஆணையம் வரும் செப்டம்பர் 9ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கான தேர்தல் பணிகள் நேற்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை (நியமன உறுப்பினர்கள் உட்பட) உள்ளடக்கிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் புதுப்பித்து வருகிறது. புது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்குப்பதிவு நடைபெறும்.

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார்.

அப்போது எதிர்க்கட்சிகளின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட மார்கரெட் ஆல்வா, கூட்டணி கட்சிகளிடையே நிலவிய ஒருங்கிணைப்பின்மை மற்றும் சில உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்ததால் தோல்வியைத் தழுவினார். அதேபோல், 2017ம் ஆண்டு மகாத்மா காந்தியக் கொள்கைகளுடன் தொடர்புடைய அவரது பேரன் கோபாலகிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக நிறுத்தியது. அப்போது நடந்த தேர்தலில் பாஜக மூத்த தலைவராக இருந்த வெங்கையா நாயுடு குடியரசு துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 782 உறுப்பினர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலில், வெற்றி பெறுவதற்கு 392 வாக்குகள் தேவைப்படுகிறது. மக்களவையில் 293 உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் 129 உறுப்பினர்களையும் கொண்டுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக தலைவர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் குடியரசு துணை தலைவர் வேட்பாளரை இறுதி செய்ய ஒருமனதாக அதிகாரம் வழங்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் ஊகங்களில் அடிபடுகின்றன.

மாநிலங்களவையின் தற்போதைய துணைத் தலைவரும், ஐக்கிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரிவன்ஷ் நாராயண் சிங், பாஜக தலைவர்களுடனான நெருக்கமான உறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களில் அவரது அனுபவம் காரணமாகப் அவரை களத்தில் இறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காரணம் பீகார் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பேச்சு அடிபடுகிறது. அதேபோல் பீகார் முதலமைச்சரும், கூட்டணியின் முக்கியத் தலைவருமான நிதிஷ் குமாரின் பெயரும் பரிசீலனையில் உள்ளது. இருப்பினும், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்ட, அவரை குடியரசு துணை தலைவராக களமிறக்க பாஜக தந்திர வேலைகளை செய்து வருவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இவர்களைத் தவிர, பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படுகின்றன. மறுபுறம், மக்களவையில் 234 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் பொதுவான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது பெரும் சவாலாக உள்ளது.

‘காங்கிரஸ்’ தலைமையில் செயல்படும் இந்தக் கூட்டணியில், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தங்களுக்குப் பெரும்பான்மை பலம் குறைவாக இருந்தாலும், வலுவான அரசியல் செய்தியைத் தெரிவிக்க, கூட்டு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் இக்கூட்டணி உறுதியாக உள்ளது. அதனால் காங்கிரஸ் தன்னிச்சையாக தங்களது கட்சியை சேர்ந்த எவரது பெயரையும் பரிந்துரைக்க வாய்ப்பில்லை. கடந்த காலத் தோல்விகளில் இருந்து பாடம் கற்று, இம்முறை சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ‘இந்தியா’ கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளர்கள் குறித்த ஊகங்களில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், தனது பேச்சாற்றலுக்காகவும் உலகளாவிய அங்கீகாரத்திற்காகவும் அறியப்பட்டவருமான சசி தரூரின் பெயர் அடிபடுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தகவல் வெளியாகவில்லை. பாஜகவின் அதிகாரப் போக்கிற்கு எதிராக அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காப்பதாகக் கூறி, தனது ஆதரவுத் தளத்தை வலுப்படுத்த, குறியீட்டு அல்லது மாநில முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரை ‘இந்தியா’ கூட்டணி தனது வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளது.

இருப்பினும், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களின் செல்வாக்கு, ‘இந்தியா’ கூட்டணியின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் எதிர்கட்சிகளின் முடிவு குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பீகாரில் நடைபெறவுள்ள சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து டெல்லியில் நேற்றிரவு ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, திமுகவின் டிஆர் பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட 25 கட்சிகளைச் சேர்ந்த 50 தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக வரும் 11ம் தேதி நாடாளுமன்றத்திலிருந்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. எனவே ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் குடியரசு துணை தலைவர் வேட்பாளருக்கான நபரை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அடுத்த சில நாட்களில் ஆளும் பாஜக தரப்பு தங்களது வேட்பாளரை அறிவிக்க உள்ள நிலையில், அந்த வேட்பாளர் மாநிலம் வாரியாக சென்று தனக்கான ஆதரவை தேடவுள்ளார். அதேபோல் ‘இந்தியா’ கூட்டணியும் அடுத்த ஓரிரு நாளில் தங்களது வேட்பாளரை தேர்வு செய்வது குறித்த முக்கிய கூட்டத்தை கூட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 21ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் என்ற நிலையில், அடுத்த சில நாட்களில் இரு கூட்டணிகளின் வேட்பாளர் தேர்வு தொடர்பான அரசியல் வியூகங்களும் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.