தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட பட்டியலை நடைமுறையில் உள்ள பட்டியலுடன் ஒப்பிடும் பணிகளை செப்.26க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட பட்டியலை நடைமுறையில் உள்ள பட்டியலுடன் ஒப்பிடும் பணிகளை செப்.26க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. தமிழகத்தில் 20 ஆண்டுக்கு முந்தைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும் பணி தீவிரம். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.
பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் வரும் அக்டோபரில் இதற்கான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஜூலை 26ஆம் தேதி வரை சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை (Bihar-ல்) தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எனினும், பாஜகவிற்கு சாதகமாக இந்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை மேற்கொண்டு 65 லட்சம் வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்கியது.
வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மீண்டும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஆதார் அடையாள அட்டையை செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதிகள் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அடுத்த ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில், அதற்கு முன்பாகவே சிறப்பு தீவிர திருத்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.