தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி செயல்படுகிறார்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 272 பேர் கூட்டு அறிக்கை
புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்குத்திருட்டு நடைபெறுவதாகவும் ஆளும் மத்திய அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் துணை போவதாக ராகுல் காந்தி அண்மைக்காலமாக குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்களை வெளியிட்டு வரும் நிலையில் ராகுல் காந்தியின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களை சேர்ந்த 16 முன்னாள் நீதிபதிகள் , ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் உள்ளிட்ட 123 முன்னாள் அதிகாரிகள் , 14 முன்னாள் தூதர்கள் , 123 முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில், இந்திய ஜனநாயகம் சமீப காலமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய அரசு நிறுவனங்களை நோக்கி விஷமத்தனமான செயல்பாடுகள் அதிகரித்துள்ளது தொடர்பாக கவலையை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையத்தை பலமுறை தாக்குவதோடு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தில் வாக்குத்திருட்டில் யார் ஈடுபட்டாலும் அவர்களை விட மாட்டேன் என மிரட்டல் விடுப்பதாகவும் ராகுல் காந்தி பேசியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி உள்ளனர்.
காங்கிரஸ் மட்டுமல்லாமல் பிற கட்சிகள், அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்டவையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிரான கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் இது அரசியல் விரக்தியை மறைக்கும் முயற்சி என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சிகளின் முரண்பாடுகள் மிகவும் கவனிக்க கூடிய ஒன்று! குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் மாநிலங்களில் இத்தகைய குற்றச்சாட்டுகள் மறைந்துவிடும். ஆனால் முடிவு சாதகமாக இல்லை என்றால் இந்திய தேர்தல் ஆணையத்தை வில்லனாக சித்தரிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜெர்மனி , பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஜனநாயகத்தை பாதுகாக்க குடியுரிமை சார்ந்த விஷயங்களை கையில் எடுப்பது போல் இந்தியாவும் அதன் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். மேலும் தேர்தல் தோல்வி விரக்தியில் இந்திய அரசின் நிறுவனங்களை நோக்கி விஷமத்தனமான செயல்பாடுகளை அதிகரிப்பதை தவிர்த்து விட்டு ஜனநாயக தீர்ப்புகளை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.


