தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராட மக்களுக்கு அழைப்பு திருடப்பட்ட 2024 தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும்: அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ் பேட்டி
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராட மக்கள் முன்வர வேண்டும் என்றும், திருடப்பட்ட தேர்தல் என்பதால் 2024 தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ் கூறினார். இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன் வைத்துள்ள வாக்கு திருட்டு குற்றச்சாட்டு உண்மை என்பதை ‘லைவ் டெமோ’ மூலம் நிரூபிக்கும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் மற்றும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் அருண் பாஸ்கர், காங்கிரஸ் ஆராய்ச்சி துறை தலைவர் மாணிக்கவாசகம் ஆகியோர் வாக்கு திருட்டு எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து விளக்கம் அளித்தனர். இதை தொடர்ந்து, பொன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
உத்தரபிரதேசத்தில் அமர்ந்து கொண்டு சென்னை, கோவையில் எப்படி வாக்குகளை திருடலாம், எப்படி வாக்காளர் பெயரை நீக்கலாம் என்பதை செய்து கொண்டிருக்கிறார்கள். இதை பற்றி ராகுல் காந்தி இரண்டு முறை விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். இத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என அமித்ஷா கூறுகிறார் என்றால் அவருடைய நம்பிக்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பீகாரில் 65 ஆயிரம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் கழித்து தான் 7 சதவீதம், 8 சதவீதம் வாக்கு அதிகமானதாக அவர்கள் கணக்கு காட்டுகிறார்கள். 2024ல் நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யப்பட வேண்டும். அது திருடப்பட்ட தேர்தல். 2015ல் இருந்து தற்போது வரை இருக்கின்ற தேர்தல் அலுவலர்களை நீக்கி அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். லேசர் பிரிண்ட் மூலம் பெட்டியில் வாக்கு செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* தேர்தல் ஆணையம் மக்களுக்கு பச்சை துரோகம் செய்துள்ளது
தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் அருண் பாஸ்கர் கூறுகையில், ‘‘எந்த ஒரு வெப்சைட் இல்லாமல் வாக்காளர் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை மாற்றலாம். தேர்தல் ஆணைய வெப்சைட் பக்கத்தில், ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தான் ஓடிபி செல்லும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர் எண்ணை நான் மாற்றிக் கொண்டால் அந்த ஒடிபி எண் எனக்கு தான் வரும்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஆதார் எண்ணின் ஓடிபி கட்டாயம் என மாற்றி இருக்கிறது தேர்தல் ஆணையம். இதற்கு முன்பு தேர்தல் ஆணைய வெப்சைட் பக்கத்தில் யார் வேண்டுமானாலும், என்ன வேணாலும் மாற்றலாம் என்று தான் இருந்தது. இதன் மூலம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் பச்சை துரோகம் செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் இது போன்ற வாக்குத் திருட்டில் ஈடுபட்டு தான் அவர்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்’’ என்றார்.