Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை’ அதிமுக வரவேற்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR எனப்படும் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை’ அதிமுக முழு மனதுடன் வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகம் முழுவதும் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்களிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR எனப்படும் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை’ அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாகவும், வெளிப்படையாகவும் செய்ய வேண்டும். இந்த பணிகளையெல்லாம் மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள்தான் செய்யப்போகிறார்கள் என்பதால், தேர்தல் ஆணையம் அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, 100 சதவீதம் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை, உண்மையான வாக்காளர்களுக்கு தான் வழங்கப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதி கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.