‘‘தேர்தலுக்காக பணியை துறக்கிறார்களாமே அதிகார வர்க்க ஆட்கள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரி யூனியனில் புதுப்புது அரசியல் விளையாட்டுகள் அரங்கேறி வருகிறதாம். லாட்டரி அதிபரின் வருகையால் கடந்த தேர்தலைபோல் இல்லாமல் 2026 பல அணிகளாக உடைந்து களம் காணும் நிலை உருவாக உள்ளதாம். இதனால் மாஜிக்கள் ரகசிய சந்திப்புகளை நடத்தி திரைமறைவு பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்களாம்.
நிலைமை இப்படியிருக்க புதிதாக நாற்காலி ஆசை ஆட்கொண்டுள்ள அதிகார வர்க்கமும், தங்களது பணிகளை தூக்கியெறிந்து விட்டு தேர்தலை சந்திக்க முடிவெடுத்து வருகிறார்களாம். ஏற்கனவே தாழ்த்தப்பட்ட துறையை உயர்த்தியதாக மார்தட்டிக் கொண்டவர், அந்நாற்காலியில் இருந்து மாற்றப்பட்ட நிலையில் அமைச்சர் பதவி ஆசை வந்துள்ளதால் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து உள்ளாராம்.
அதேபோல் கிராமப்புற பகுதியில் காவல் நிலையத்தை கவனித்து வந்த எஸ்ஐ ஆனவர், ஏனாமிற்கு பந்தாடப்பட்ட நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு தலைமையகத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளாராம். வரும் தேர்தலில் மக்களை சந்திக்கப் போவதுதான், தனது விருப்ப ஓய்வுக்கான காரணமாக தெரிவித்து வருகிறாராம். இதேபோல் மேலும் சில அதிகார பலமிக்கவர்களும் அரசியல் நாற்காலி ஏற தயாராகி வருவதால் யூனியன் பொதுத்தேர்தலில் மோதலுக்கு பஞ்சமிருக்காது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மும்மூர்த்திகளின் குடைச்சல் அதிகமாகி இருக்காமே..’’ என அடுத்த கேள்வியைத் தொடுத்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரில் இலைக்கட்சியின் மும்மூர்த்திகளின் குடைச்சல்களையும் மீறி, மருத்துவர் கஷ்டத்துடனேயே அரசியல் செய்து வருகிறார். கடந்த காலத்தில் தேர்தலில் இலைக்கட்சி மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டதால் புது உற்சாகம் பெற்ற மலராத கட்சித் தொண்டர்கள், வரும் தேர்தலில் தங்களுக்கு முதல் படையை தந்தாக வேண்டும் என்று ஆர்டர் போட ஆரம்பித்து விட்டார்களாம்.
தகவலறிந்து உஷாரான முதல்படையின் சிட்டிங்கான செல்லம், அந்த வேலை ஆகாது என்று கட் அண்ட் ரைட்டாக முடித்து விட்டாராம். இதனால், மாவட்டத்தின் தொகுதிகள் 10ல் வடக்கு, தெற்கென இரு தொகுதிகளை தங்களுக்குத் தந்தாக வேண்டுமென இலைக்கட்சியை இப்போதே மலராத கட்சியினர் அழுத்தத் துவங்கி விட்டனர். தூங்கா நகர போட்டிக் களத்திலிருந்து மருத்துவரை மெடல் மாவட்டத்தின் ‘சுழி’ தொகுதிக்கு தள்ளிவிட்டால், தங்களுக்கான அதிகார பலத்திற்கு பங்கம் வராது என்ற திட்டத்தில் மும்மூர்த்திகளும் மருத்துவரை விரட்ட வெகு வேகத்தில் செயல்பட்டு வருவதாக மருத்துவரின் ஆதரவாளர்களே குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.
கடந்த முறை நின்ற வடக்கையே குறிவைத்து மருத்துவரும் வேலை பார்த்து வருகிறார். சேலத்துக்காரர் வந்தபோதும், பெரும் தொகையைச் செலவழித்து வரவேற்றும், கூட்டம் திரட்டியும் வடக்கை நம்பியே வேலை பார்த்தார். இப்போது மெடல் மாவட்டத்திற்கு தன்னை தள்ளிவிடும் காரியத்தில் மும்மூர்த்திகள் களமிறங்கி இருப்பதைக் கண்டு மருத்துவர் ரொம்பவே கலங்கிப் போயிருக்கிறார்.
சேலத்துக்காரரிடம் அத்தனை மனக்குறையையும் விரைவில் கொட்டித்தீர்த்து தீர்வு கேட்க இருக்கிறாரென இவரது ஆதரவாளர்கள் அனைவரின் காதுபட பேசி வருகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்த மலராத தாமரை கட்சி நிர்வாகி புலம்பிட்டு இருக்காராமே.. ஏனாம்..’’ என கேட்டார். ‘‘மன்னர் மாவட்டத்தில் மலராத தாமரை கட்சியில் முருகன் பெயர் கொண்ட ஒருவருக்கு மாநில அளவிலான பதவி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் முருகன் பெயர் கொண்டவர் சந்தோசம் அடைந்தாலும், கட்சிக்காக தான் செலவு பண்ணுன லட்சங்களில் கடைசியில் இந்த ெபாறுப்பு தான் தனக்கு மிச்சம். குறிப்பாக மாஜி மாநில தலைவர் மாநில அளவில் பயணத்தின் போது கூட மன்னர் மாவட்ட செலவுகளையும் கவனித்து கொண்டதால் கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் கூட அந்த நேரத்தில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாம்... ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் பதவி எதுவும் கொடுக்கவில்லை.
ஏமாற்றம் தான் மிஞ்சியது. தற்போது மாநில அளவிலான பதவி வழங்கப்படும் என அறிவித்திருக்காங்க என அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் புலம்பியிருக்காராம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘சம்திங் தருபவர்களுக்கு தான் போஸ்டிங் போடறாங்களாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல வடக்கு மாவட்ட மலர் பார்ட்டியில மூன்றெழுத்து பெயர் கொண்ட தலைவி இருக்காங்க.
இவங்க, வேண்டியவங்களுக்கு மட்டும் பார்த்து, பார்த்து போஸ்டிங் போட்டு வர்றாங்களாம். சுமார் 8 மாதத்திற்கு முன்னாடிதான், மாவட்ட தலைவி பதவியையே இந்த மூன்றெழுத்துக்காரர் பெற்றாராம். பதவி பெற்றவரு, வடக்கு மாவட்டத்துல இருக்கிற மாவட்ட பொதுச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட மையக்குழு நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காமலேயே, சம்திங் தருபவர்களுக்கு பதவியும், தலைவிக்கு வேண்டியவர்களுக்கும் தான் போஸ்டிங் போட்டிருக்குறதாக கட்சிக்குள்ளவே புகைய ஆரம்பிச்சிருக்குது.
பொறுப்பு ஏற்றதுல இருந்து, ஒரு நாள் கூட சொந்த ஊர்ல எந்த விழாவும் நடத்தவே இல்லையாம். வந்தா வாசி, ஆறு அணி, செய் ஆறு போன்ற ஏரியாக்கள்லத்தான் அதிகாரத்தை காட்டுறாங்களாம். உள்ளூரில் அவரது பருப்பு வேகவில்லையாம் பணத்தை செலவழிக்க மனமும் இல்லையாம்..’’ என்றார் விக்கியானந்தா.