புதுச்சேரி: தேர்தலில் விஜய்க்கு தோல்விதான் என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார். புதுச்சேரியில் பாஜ வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநில பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பீகார் தேர்தல் வெற்றி என்பது இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை மறுபடியும் ஏற்படுத்தி உள்ளது.
தவெக தலைவர் விஜய் பேசும் எதிர்ப்பு அரசியலை மட்டுமே வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்ல வேண்டும். கட்சி தொடங்கி விட்டோம் என்பதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை விஜய் எதிர்க்கிறார். பாஜவை எதிர்ப்பதே விஜய்யின் மனநிலையாக மாறிவிட்டது. எதிர்ப்பு அரசியல் செய்து ராகுல்காந்தி 95 தேர்தலில் தோற்றுள்ளார்.
இதே நிலைதான் விஜய்க்கும் ஏற்படும். புதிய கட்சி துவங்கிய பிரசாந்த் கிஷோர் பீகாரில் 3.5 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். ஆளுங்கட்சி நன்றாக இருக்கும்போது மக்களுக்கு ஒரு மாற்று தேவை இல்லை. பிறகு எப்படி வாக்களிப்பார்கள். கட்சி ஆரம்பித்து விட்டேன் என்பதற்காக எதிர்த்தால் சரியாக இருக்குமா? தவறே செய்யாதபோது தவறு, தவறு என்று ஏன் சும்மா சொல்கிறீர்கள்.? இவ்வாறு அவர் கூறினார்.


