Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தலின்போது ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் கோவையில் பாஜ பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் 2 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை

* ஆவணங்களை வைத்து சிபிசிஐடி போலீசார் சரமாரியாக கேள்வி

* ஆர்எஸ்எஸ் பிரமுகர் கேசவ விநாயகம் ஆஜராகாமல் இழுத்தடிப்பு

சென்னை: தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக, கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார், 2 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதேநேரம் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகம் மற்றும் முரளி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகாமல் கால அவகாசம் கேட்டு விசாரணையை இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது கடந்த மார்ச் 26ம் தேதி நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் வைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். மேலும், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பணம் கை மாறியதாக கூறப்படும் ஓட்டல் உரிமையாளரான பாஜ தொழிற்துறை மாநிலத் தலைவர் கோவர்த்தனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரது 2 மகன்களான பாலாஜி, கிஷோர் ஆகியோரிடம் கடந்த 7ம் தேதி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கோவர்தனின் இரு மகன்களும் அளித்த வாக்குமூலத்தின் படி, பாஜ மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் பாஜ நிர்வாகி முரளி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கேசவ விநாயகம் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் 21ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பினர். சம்மனை தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் 3 பேரும் ஆஜராக வேண்டும்.

ஆனால் இந்த 3 பேரும் விசாரணைக்கு ஆஜராகாமல், சொந்த வேலை காரணமாக வாரணாசியில் இருப்பதாகவும், அதனால் வரும் 1ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுவதாக சிபிசிஐடி அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞர்கள் மூலம் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சிபிசிஐடி போலீசார் அந்த 3 பேரின் தகவல்களை சேகரித்தனர். வாரணாசியில் இருப்பதாக கூறிய பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை அவர் கோவை வீட்டில் இருப்பது தெரியவந்து போலீசார் அங்கு நேரில் சென்றனர். அப்போது வீட்டில் இருந்த எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி போலீசார் வீட்டிற்கு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான குழுவினர், ஏற்கனவே அளித்திருந்த சம்மனை எஸ்.ஆர்.சேகரிடம் காட்டி விசாரணையை தொடங்கினர். விசாரணையின்போது போலீசாரின் பல கேள்விகளுக்கு எஸ்.ஆர்.சேகர் பதில் அளிக்காமல் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது. 2 மணி நேரம் நீடித்த இந்த விசாரணை காலை 11 மணிக்கு முடிந்தது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் எஸ்.ஆர்.சேகரிடம் தெரிவித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றனர். இதனிடையை ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகம், முரளி ஆகிய இருவரும் போலீசில் ஆஜராகவில்லை. பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடப்பதாக வெளியான தகவல் பரவியதால் ஏராளமான பாஜகவினர் அவரது வீட்டின் முன் குவிந்தனர். இதைத்தொடர்ந்து உள்ளூர் போலீசாரும் அங்கு வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

* ரூ.4 கோடியில் பாஜகவுக்கு தொடர்பு இல்லை

சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு பாஜ மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: ‘தேர்தல் பணம் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பாக சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், நான் சொந்த வேலை காரணமாக 1ம் தேதிக்கு பிறகு ஆஜராக அவகாசம் கேட்டிருந்தேன். ஆனால், போலீசார் திடீரென வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பந்தமில்லாத பல கேள்விகளை என்னிடம் கேட்டனர். பணம் பறிமுதல் வழக்கிற்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்’ என்று அவர் கூறினார்.