பாட்னா: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் தயார் நிலை குறித்து அக்டோபர் 4, 5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜ கூட்டணி ஆட்சி நடப்பாண்டு நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பேரவைக்கு நடப்பாண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதையொட்டி பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வௌியிட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் இம்மாதம் 30ம் தேதி வௌியிடப்பட உள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொது, காவல்துறை மற்றும் செலவு பார்வையாளர்களின் விளக்க கூட்டம் அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் தயார் நிலை குறித்து அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆய்வு நடைபெற உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் வரும் 4ம் தேதி பீகார் தலைநகர் பாட்னா செல்ல உள்ளனர். இந்த ஆய்வின்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதனால் பீகார் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.