மதுரை: சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி அமையுமென பிரேமலதா தெரிவித்தார். மதுரை, தெப்பக்குளத்தில் தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளன. மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும். இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாக சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்போம். கூட்டணி மந்திரி சபையில் நாங்கள் இருப்போம். யாருடனும் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கூட்டணிகள் மாறலாம். அது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு தெரியவரும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படியொரு சூழல் வந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் உடன்படுவார்கள். எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள் தான்’’ என்றார்.
* அதிமுக மாஜி அமைச்சர் ஒரு மணிநேரம் வெயிட்டிங்
பிரேமலதாவை சந்திக்க அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் வந்தார். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மண்டபத்திலுள்ள தனி அறையில் காத்திருந்தார். கூட்டம் முடிந்ததும் தொண்டர்களுடன் பிரேமலதா புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்ததால், அப்போது அறையை விட்டு எழுந்து வந்த உதயகுமார், மேடையில் வைத்தே பிரேமலதாவை சந்தித்தார். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். சந்திப்புக்கு பின் உதயகுமார் அளித்த பேட்டியில், ‘‘பிரேமலதாவின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க வந்தேன். கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தான் அறிவிப்பார்’’ என்றார்.


