லக்னோ: உபியின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:உரிமைகளை மறுப்பது, வாக்குகளை மோசடி செய்வது என ஜனநாயகத்தை அழிக்க பாஜ சதி செய்கிறது. இந்த சதி வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேர்தல் மோசடியின் உலக பல்கலைக்கழகம் பாஜ என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில அதிகாரிகளின் துணையுடன், பாஜ தன்னை ஆதரிக்கும் போலி வாக்காளர்களை சேர்க்கிறது.
அதே சமயம், எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் பெயர்களை நீக்கி வாக்காளர் பட்டியலில் மோசடி செய்கிறது. அவர்கள் போலி வாக்குகளைப் பதிவு செய்ய, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை வாக்குச் சாவடிகளில் நிறுத்துகின்றனர். வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருக்க துப்பாக்கிகளை காட்டி மிரட்டுகின்றனர். பாஜவின் ஆதரவாளர்கள் பல இடங்களில் வாக்குகளைப் பதிவு செய்ய வைக்கப்படுகின்றனர். பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பின் கீழ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுகின்றனர். இன்றைய வாக்காளர்கள் பாஜ தங்களுக்கு வேண்டாம் என்கின்றனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.