புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 2024ம் ஆண்டு தேர்தல் எவ்வாறு ‘திருடப்பட்டது’ என்பது குறித்த ஆவணப்படத்தின் இணைப்பைத் தனது கட்சித் தொண்டர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப காங்கிரஸ் கட்சி, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிராய்) விண்ணப்பித்திருந்தது. ஆனால், இது போராட்டத்தை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி, எஸ்எம்எஸ்களை அனுப்ப அனுமதி மறுத்துவிட்டது.
டிராயின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், டிராய் அமைப்பு பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு போலச் செயல்படுவதாகவும், எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான விண்ணப்பத்தை டிராய் நிராகரித்ததாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை டிராய் நிராகரித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் டிராய் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் எவ்வாறு திருடப்பட்டது என்பது குறித்து ஒரு அரசியல் கட்சியின் மகாராஷ்டிரா கேடருக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான எந்த விண்ணப்பத்தையும் டிராய் பெறவில்லை. அந்த விண்ணப்பம் சேவை வழங்குநர்களில் ஒருவரான எஸ்டிபிஎல்-க்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவர் அதனை நிராகரித்தார். இந்த செயல்பாட்டில் டிராய் எந்த நிலையிலும் ஈடுபடவில்லை” என்று தெரிவித்துள்ளது.