Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சி தேர்தல் ஆணையம் பாஜவுக்கு துணைபோகிறதா? அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை

சென்னை: தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிக்கும் பாஜவுக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா? என்று அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மோடி அரசு அமைந்த பிறகு தன்னாட்சி அதிகாரங்கள் கொண்ட சி.பி.ஐ, ஆர்.பி.ஐ, சி.ஏ.ஜி, என்.ஐ.ஏ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக் அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறின. இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்கு தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

தேர்தல் ஆணையத்தை நோக்கி உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள், எஸ்ஐஆர் மேற்கொள்வதில் தேர்தல் ஆணையத்திடம் உள்ள நேர்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டினார். பாஜ கூட்டணியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானின் சொந்த தொகுதியிலேயே 80 சதவீத பட்டியல் சமூகத்தினரிடம் தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் இல்லை. பாஜவுக்கு எதிராக வாக்களிக்கும் இஸ்லாமியர்கள், பட்டியல் வகுப்பினர் உள்ளிட்டவர்களின் வாக்குகளைப் பறிப்பதே எஸ்ஐஆர்ன் நோக்கம் என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது.

பீகாரில் பல லட்சக்கணக்கானவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து ஏன் நீக்கினார்கள்? அதிலிருந்து சில லட்சக்கணக்கானோரை மீண்டும் ஏன் சேர்த்தார்கள் என்பதற்கு தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்கவில்லை. ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தலை நேர்மையோடு நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி. ஆனால், தேர்தல்களில் தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜவின் நடவடிக்கைகளுக்கு துணை போவதாக தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது. பீகாரில் எஸ்ஐஆர்ல் நடைபெற்றுள்ள மோசடியை இணையப் பத்திரிகை ஒன்றின் கள ஆய்வு மூலம் வெட்ட வெளிச்சமாக்கியது. பீகாரில் கடைபிடிக்கப்பட்ட தில்லுமுல்லுகளை போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். கள ஆய்வு மேற்கொள்ளப்படாமலேயே நமது வாக்காளர்களை நீக்கவும் வெளி வாக்காளர்களைச் சேர்க்கவும் முயற்சிகள் நடக்கலாம். இந்தச் சதியைத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.