நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும். முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு மனுத்தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசி. இரண்டாம் கட்டமாக 122 தொதிகளுக்கு மனுத்தாக்கல் செய்ய வரும் திங்கட்கிழமை கடைசி நாள். ஆனால் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் இடம் பெற்ற இந்தியா கூட்டணியில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. எப்போது முடியும் இந்த நிலை என்பது தெரியவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ, முதல்வர் நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. ஆனால் ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்கள், மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா, முன்னாள் முதல்வரும் ஒன்றிய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டதால் அங்கு கடும் அதிருப்தி நிலவுகிறது.
மேலும் எந்த தொகுதி, எந்த கட்சிக்கு என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்திற்கு இடையே 71 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ வெளியிட்டு விட்டது. 2 துணை முதல்வர்கள், 6 அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா முறையே தாராபூர் மற்றும் லக்கிசராய் தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் லாலு பிரசாத் யாதவின் நம்பகமான உதவியாளராக இருந்த முன்னாள் ஒன்றிய அமைச்சரான ராம்கிருபால் யாதவ், டானாபூரில் போட்டியிடுகிறார்.
ஆனால் பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவின் பெயர் பட்டியலில் இல்லை. அவரது பாட்னா சாஹிப் தொகுதியில் ரத்னேஷ் குஷ்வாஹாவை பா.ஜ நிறுத்தியுள்ளது. இதில் குழப்பம் என்னவென்றால் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி போட்டியிடும் தாராபூர் தொகுதி, 2010 முதல் முதல்வர் நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி வசம் உள்ளது. இதனால் பா.ஜ, நிதிஷ் இடையே தொகுதியை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் லாலுவும், அவரது மகன் தேஜஸ்வியும் தவிக்கிறார்கள். கேட்கும் தொகுதியை ஒதுக்காததால் தேஜஸ்வியாதவை முதல்வர் வேட்பாளராக பகிரங்கமாக அறிவிக்காமல் காங்கிரஸ் இழுத்தடிக்கிறது. இப்படி இரு கூட்டணியிலும் மெகா குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மனுத்தாக்கல் முடிந்த பிறகு பிரசாரம் செய்யக்கூட நாட்கள் இல்லை.
மொத்தம் 15 நாட்கள் தான் பிரசாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை. தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. வேட்பாளர்கள் தேர்வு நடக்கவில்லை. எப்படி பிரசாரம் செய்வது, எத்தனை நாள் பிரசாரம் செய்வது என்பது அடுத்த கவலை. மொத்தத்தில் பீகார் தேர்தல் ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சி கூட்டணிக்கும் தூங்கா இரவாக மாறிவிட்டது. முடிவு எடுக்க முடியாமல் அத்தனை தலைவர்களும் தவிக்கிறார்கள். அப்படி ஒரு இழுபறி நிலை அங்கு நீடிக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் எல்லாம் முடிவுக்கு வந்து விடும்.