2026 தேர்தல் படுதோல்வியால் நயினாரின் பதவி இரண்டரை ஆண்டுகளா, 2 மாதமா டெல்லி ஓனர்கள் முடிவு செய்வார்கள்: அமைச்சர் சேகர்பாபு விளாசல்
சென்னை: வரும் சட்டப்பேரவை தேர்தல் படுதோல்வியால் நயினாரின் பதவி இரண்டரை ஆண்டுகளா, 2 மாதங்களா என்பதை டெல்லி ஓனர்கள் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் சிஎம்டிஏ, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.
திருவிக நகர் சட்டப்பேரவை தொகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகம், பல்நோக்கு மைய கட்டிடம், நேரு ஜோதி நகர் பனந்தோப்பு ரயில்வே காலனி அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, தரமான முறையில் கட்டிடங்கள் அமைய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நயினாருக்கு இரண்டரை ஆண்டுகளா அல்லது இரண்டு மாதங்களா என முடிவு செய்வது டெல்லியில் உள்ள ஓனர்கள் தான் அவர் அல்ல, அந்த பதவி என்பது இசை நாற்காலியை போன்றது, எப்படி நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, அண்ணாமலைக்கு அரோகரா போட்டார்களோ, அதேபோல் சட்டமன்றத் தேர்தல் 2026க்கு பிறகு ஏற்படப்போகும் படுதோல்வியால், நயினாரை பேக் செய்யும் வேலையை டெல்லி செய்யும்.
நயினாரே சொல்லி இருக்கிறார் நான் போன் செய்தால் நயினார் நாகேந்திரன் பேசுறேன் என்றால் நயினாவ என கேட்கிறார்கள், அவருடைய கட்சிக்காரர்களே அவரைப் பற்றி ஒரு புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டை திராவிட மாடல் ஆட்சியை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை, எனவே 2026 தேர்தலுக்கு பிறகு அவரது நாற்காலி காலியாகும் என்பது எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. திராவிட மாடல் பெறப்போகும் வெற்றியால்’’ என்றார்.
