Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் முறைகேடு புகார்; ராகுலின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம்: ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்ததால் பரபரப்பு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் ஆதாரங்களுடன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மக்களவை எதிர்கட்சி தலைவரான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அளித்த பேட்டியில், ‘நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திட்டமிட்ட ‘வாக்குத் திருட்டு’ நடந்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்துள்ளது. கர்நாடகாவின் ஆலந்த் மற்றும் மகாராஷ்டிராவின் ராஜுரா தொகுதிகளில் நடந்த முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. எதிர்க்கட்சி வாக்காளர்களை குறிவைத்து சாப்ட்வேர் மூலம் முறைகேடுகள் நடந்துள்ளது’ என்றார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர் பெயரை நீக்க நடந்த சில முறையற்ற முயற்சிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையமே தாமாக முன்வந்து அப்போதே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாக கூறியுள்ளது.

இது தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களும், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியே மாநில காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி தற்போது கேட்கும் தகவல்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாநில அரசிடம் வழங்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல், மகாராஷ்டிராவின் ராஜோரா தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டையும் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து ராஜோரா தொகுதி தேர்தல் பதிவு அதிகாரி கூறுகையில், ‘அக்டோபர் 1 முதல் 17ம் தேதி வரை புதிய வாக்காளர் சேர்க்கைக்காக 7,592 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் ஆய்வில், அவற்றில் 6,861 விண்ணப்பங்கள் போலி அடையாளங்கள், தவறான புகைப்படங்கள் மற்றும் முகவரிகள் காரணமாக செல்லாதவை என கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டன.

இதன் மூலம், வாக்காளர் பட்டியலில் எந்த போலி பெயரும் சேர்க்கப்படவில்லை’ என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், இந்த முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டுக்கு புதிய சிக்கல்

ராகுல் காந்தி தனது செய்தியாளர் சந்திப்பின்போது ஆதாரமாகக் காண்பித்த செல்போன் எண்ணுக்குரிய நபர், தனக்கு இந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த அஞ்சனி மிஸ்ரா என்ற அந்த நபர், விற்பனைப் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த செல்போன் எண்ணை அவரே பயன்படுத்தி வருகிறார். வாக்காளர் பெயரை நீக்கம் செய்யக்கோரி எந்த விண்ணப்பமும் அளிக்காத நிலையில், தனது எண் எப்படி வெளியானது என அவர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர் சந்திப்பில் தனது எண் வெளியானதில் இருந்து, எனக்கு இடைவிடாமல் ஏராளமான அழைப்புகள் வருவதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அஞ்சனி மிஸ்ரா வேதனை தெரிவித்துள்ளார். இந்த தொடர் தொந்தரவு காரணமாக, இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.