Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகள் எவை? தலைவர்கள் கடும் கண்டனம்

* மமக, கொமதேக, தமமுக, மஜக கட்சிகளின் அங்கீகாரம் ரத்து, விரைவில் மேல்முறையீடு செய்வோம் என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டாக தேர்தலில் போட்டியிடாத 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் மமக, கொமதேக ஆகிய முக்கிய கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விரைவில் மேல்முறையீடு செய்ய போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன.

இவை தவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக அவை இயங்கி வருகின்றன. இவற்றில் தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகள் போட்டியிடாதது, செலவு கணக்கை தாக்கல் செய்யாதது உள்ளிட்ட விதிகளை மீறியதற்காக நாடு முழுவதும் 474 பதிவு செய்யப்பட்ட, அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. இவற்றில் தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும்.

அதாவது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (ஈஸ்வரன்), மனிதநேய மக்கள் கட்சி (ஜவாஹிருல்லா), மனிதநேய ஜனநாயக கட்சி (தமிமுன் அன்சாரி), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்), எழுச்சி தேசம் கட்சி, கோகுல மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி (என்.ஆர்.தனபாலன்), தமிழர் தேசிய முன்னணி, தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம், திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ், தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, தமிழர் முன்னேற்றக் கழகம், தொழிலாளர் கட்சி, உரிமை மீட்பு கழகம், வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி, விஜய பாரத மக்கள் கட்சி.

அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், அகில இந்திய மக்கள் நகர்வு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம், அகில இந்திய சத்யஜோதி கட்சி, அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம், அண்ணா மக்கள் இயக்கம், அனைத்து இந்திய தொழிலாளர் கட்சி, அண்ணன் தமிழக எழுச்சி கழகம், டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம், எழுச்சி தேசம் கட்சி,

இந்திய காதலர்கள் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி, மக்கள் தேசிய கட்சி, மக்கள் கூட்டமைப்பு கட்சி, மக்களாட்சி முன்னேற்ற கழகம், பச்சை தமிழகம் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், சிறுபான்மை மக்கள் நல கட்சி, சூப்பர் தேசிய கட்சி, சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம், தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழர் தேசிய முன்னணி கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் ஒன்று மனிதநேய மக்கள் கட்சி. அக்கட்சியின் தலைவராக எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளார். இந்த கட்சி கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. மமக தனி சின்னத்தில் போட்டியிடாததால் பதிவை இழந்துள்ளது. கொமதேக தலைவராக உள்ள ஈஸ்வரன், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக, பாஜ கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து வந்தது. 2021ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜ சின்னத்திலும் போட்டியிட்டது. 2016 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்ட தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சி. 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் இக்கட்சி போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு ரத்துக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது: மக்கள் பிரதிநிதித்துவம் சட்டத்தின் விதிமுறைகளிலோ அல்லது அரசமைப்பு சட்டத்திலோ பதிவு செய்யப்பட்ட கட்சியை அந்த பதிவில் இருந்து நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. 2001ல் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் ஒரு தவறான, பொய்யான தகவல்கள், ஏமாற்று ரீதியான, மோசடி ரீதியான வகையில் ஒரு கட்சி பதிவு செய்தால் தேர்தல் ஆணையம் நீக்கலாம் அல்லது சட்டவிரோத நடவடிக்கை சட்டம் (உபா சட்டம்) ஒரு அரசியல் கட்சி தடை செய்யப்பட்டால் அதனுடைய பதிவை நீக்கலாம்.

இதை தவிர ஒரு அரசியல் கட்சியின் பதிவை நீக்குவதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்தவழிமுறைகளும் இல்லை.  மக்கள் பிரநிதித்துவ சட்டம் 29ஏவின் 5வது உட்பிரிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மோசடி செய்து, வேறு தவறுகளை இழைத்து பதிவு செய்தால் தான் நீக்க முடியும். அதே மாதிரி அரசியலமைப்பு சட்டம் 124வது பிரிவு தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலை நடத்தும் அதிகாரத்தை கொடுக்கிறது.

அதிலும் கட்சிகளை பதிவுகளில் இருந்து நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. பதிவு பெற்ற கட்சியை நீக்குவதற்கு அதிகாரம் இல்லாத சூழலில் தேர்தல் ஆணையம் எங்கள் கட்சியின் பதிவை நீக்கியிருப்பது தவறானது. இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். இன்றைக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் நாடு முழுவதும் ஒரு மிகப்பெரிய நெருக்கடி. தினந்தோறும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பல்வேறு தில்லுமுல்லுகளை பகிரங்கப்படுத்தி வருகிறார்.

இதில் இருந்து திசை திருப்புவதற்காக இது போன்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததனால் மட்டுமே ஒரு கட்சி வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எந்தவிதமான நிர்பந்தமும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தரப்படவில்லை. அதே நேரத்தில் மமகவை பொறுத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து, திமுக கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிட்டோம்.

அதனாலேயே எங்கள் பதிவை நீக்க வேண்டும் என்று சொல்வது எந்தவிதமான நியாயமும் இல்லை. உள்ளாட்சி மன்ற தேர்தலில், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எங்கள் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பேரூராட்சி தலைவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.