தேர்தல் ஆணையம் வாய் திறக்காததால் பாமகவை மீட்க உச்சநீதிமன்றம் செல்லும் ராமதாஸ்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு
திண்டிவனம்: தேர்தல் ஆணையம் வாய் திறக்காததால் பாமகவை மீட்க உச்சநீதிமன்றம் செல்ல ராமதாஸ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாமகவில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இரு அணியினரும் போட்டி கூட்டங்கள் நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். தங்களுக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இருவரும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் பரந்தமான், மாநில வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் கோபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது முக்கிய நிர்வாகிகள் பேசும்போது, அன்புமணி ஆதரவாளர்கள், பாமகவினர் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக முறையிட்டனர். சில வாரங்களுக்கு முன்பு சேலத்தில் அருள் எம்எல்ஏ மீது நடந்த தாக்குதல் மட்டுமல்லாமல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாமகவிரை அன்புமணி ஆதரவாளர்கள் தாக்கி வருவதாக புகார் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய ராமதாஸ், ‘அன்புமணி ஆதரவாளர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டால் அதை சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, யாரும் திருப்பி தாக்கக் கூடாது.
அன்புமணி ஆதரவாளர்களால் பாமகவினர் தாக்குதலுக்கு உள்ளானால் சமூக நீதி பேரவையினர் அவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் நாம் பொறுமையாகயும், சாதுர்யமாகவும் இந்த பிரச்னையை கையாள வேண்டும்’ என்றார். மேலும், ராமதாஸ் தலைமையிலான பாமகவை அங்கீகரிக்க தேர்தல் கமிஷனில் 2 முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் உச்சநீதிமன்றத்தை நாடுவது சம்பந்தமாக இக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுத்ததாக தெரிகிறது.
தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மஹாலில் நாளை மறுதினம் பாமக, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. 19ஆம் தேதி இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும், வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
* பாலுவுக்கு கண்டனம்
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் கோபு கூறுகையில், ‘பீகார் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேர்தல் ஆணையத்தை அணுகி மாம்பழம் சின்னம் பெறப்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு சின்னம் கொடுக்கவில்லை. பாமகவுக்குதான் சின்னம் கொடுக்கப்பட்டது. பீகார் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என பாலுவிடம்தான் கேட்க வேண்டும்.
பாண்டிச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாமக உள்ளதால் அதனை குறிப்பிட்டு சின்னம் பெறப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகுவோம். தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, பாலு குண்டர் என கூறுவதை வன்மையாக கண்டிக்கிறோம், என்றார்.


