Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கணக்கீட்டு படிவத்தை ஆன்லைன் மூலம் நிரப்பும் வசதி

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கணக்கீட்டு படிவத்தை ஆன்லைன் மூலம் நிரப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in -ல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணையதளம் மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணினை பயன்படுத்தி இணையதளம் மூலம் (ஆன்லைன்) உள் நுழைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (ஓடிபி) உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் “Fill Enumeration Form” என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம். இந்த வசதியினை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.

வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்திற்கு மாறும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி ) அனுப்பப்படும். அந்த ஓடிபி உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும். தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.