வரும் 6ம் தேதி முதற்கட்ட தேர்தல் பீகாரில் நாளை பிரசாரம் ஓய்கிறது: பிரதமர் மோடி ராகுல் காந்தி அனல் தெறிக்கும் பரப்புரை
புதுடெல்லி: பீகாரில் வரும் 6ம் தேதி முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. நேற்று ஒரே நாளில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனல் தெறிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக வரும் 6 மற்றும் 11ம் தேதிகளில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 14ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், முதல்கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.
இதனால், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, தேஜஸ்வி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேற்று இறுதிகட்ட அனல் தெறிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி போஜ்பூர், நவாடா மாவட்டங்களில் தொடர்ச்சியான பேரணிகளில் உரையாற்றினார். மாலையில் பாட்னாவில் நடந்த பிரமாண்ட ரோடு ஷோவில் மோடி பங்கேற்றார்.
நேற்றைய பிரசாரங்களில் அவர் பேசுகையில், ‘‘ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை. காங்கிரசின் தலையில் துப்பாக்கியை வைத்து தான் அதை ஆர்ஜேடி பெற்றுள்ளது. அவர்கள் காட்டு ராஜ்ஜிய பள்ளியில் தங்கள் பாடங்களை படித்தவர்கள். அத்தகையவர்கள் பீகாருக்கு ஒருபோதும் நல்லது செய்ய முடியாது. இந்த தேர்தலில் ஆர்ஜேடியை தோற்கடிக்க காங்கிரஸ் விரும்புகிறது.
நவம்பர் 11ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு அவர்கள் சண்டை போடுவதை நீங்கள் பார்க்கலாம். ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மறைவிடங்களில் குண்டுவீசப்பட்ட போது காங்கிரஸ் அரச குடும்பத்தினர் தூக்கத்தை இழந்தனர். ஆர்ஜேடி, காங்கிரசுக்கு 2 குடும்பங்களை பற்றி மட்டும் தான் கவலை. ஒன்று, பீகாரில் அதிகமான ஊழல் செய்த குடும்பம், மற்றொன்று இந்தியாவிலேயே அதிக ஊழல் செய்த குடும்பம்.
பீகார் மக்கள் இன்னும் காட்டு ராஜ்ஜியத்தை மறக்கவில்லை. எனவே இத்தேர்தலில் காட்டு ராஜ்ஜியக் கட்சிகள் வரலாற்றில் மோசமான தோல்வியை பெற உள்ளன. எதிர்காலத்தில் பீகார் இளைஞர்கள் பீகாரிலேயே வேலை செய்ய முடியும். இது மோடியின் கேரண்டி’’ என்றார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ககாரியா, பெகுசராய் மாவட்டங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அதில் அவர் பேசுகையில், ‘‘பலவீனமான உடலமைப்பை கொண்டிருந்தாலும், அந்த காலத்தில் வல்லரசாக இருந்த ஆங்கிலேயர்களை எதிர்த்தார் மகாத்மா காந்தி. ஆனால் 56 அங்குல மார்பு கொண்டிருப்பதாக நம்மிடம் பெருமை பேசும் பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூரின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் அழைத்த போது குலைநடுங்கிவிட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான போர் 2 நாளில் முடிந்தது. மோடி டிரம்புக்கு மட்டும் பயப்படுபவர் அல்ல, அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் ரிமோட் கன்ட்ரோலாகவும் இருக்கிறார்.
அவர்கள் ஆட்டிவைக்கும்படி ஆடுகிறார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற மோடி அரசின் அனைத்து முக்கிய முடிவுகளும் சிறு வணிகங்களை அழித்து பெரிய நிறுவனங்களுக்கு பயனளிப்பதை நோக்கமாக கொண்டவை. இப்போது நீங்கள் நடனமாடச் சொன்னால் கூட மோடி ஆடுவார். ஓட்டுக்காக எதையும் அவர் செய்வார். ஆனால் தேர்தல் முடிந்ததும் தனக்கு பிடித்த நிறுவனங்களுக்காக மட்டுமே வேலை செய்வார்.
வேலைவாய்ப்பு போன்ற உண்மையான பிரச்னைகள் குறித்து பீகார் இளைஞர்கள் கேள்வி எழுப்பாமல் இருக்க அவர்களின் கவனத்தை திசை திருப்ப நீங்கள் ரீல்ஸ்களை பார்க்கவும், ரீல்களை உருவாக்கவும் பிரதமர் மோடி மலிவு விலையில் இன்டர்நெட் சேவை வழங்குகிறார். அந்த பணம் கூட அம்பானிக்கு தான் செல்கிறது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி டெல்லியில் மோடியின் பேச்சை கேட்கும் சில அதிகாரிகள் மூலம் நடத்தப்படுகிறது. இங்கு நடப்பது ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி’’ என்றார்.
* குளத்தில் இறங்கி மீன்பிடித்த ராகுல்
பெகுசராய் மாவட்டத்தில் பிரசாரத்தின் இடையே குளம் ஒன்றில் படகில் பயணித்த ராகுல் காந்தி, திடீரென குளத்தின் நடுப்பகுதியில் படகில் இருந்து தண்ணீரில் இறங்கினார். அவருடன் கூட்டணி கட்சி தலைவர்களும் குளத்தில் இறங்கினர். அங்கு குளத்தில் மீன்பிடிக்கும் நிகழ்ச்சியில் மீனவர்களுடன் ராகுலும் சேர்ந்து வலையை இழுத்து மீன் பிடிக்க உதவினார். அப்போது அங்கு குவிந்திருந்த மீனவர்கள் ராகுல் வாழ்க என கோஷமிட்டனர். மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
* சுயமரியாதையை மீட்க மாற்றத்திற்கான நேரம்
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘பீகார் மக்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தங்களின் கடின உழைப்பு, திறமையால் அந்த நகரத்தை பிரகாசமாக்குகிறார்கள். ஆனால் ஏன் அவர்களால் இன்னும் தங்கள் சொந்த பீகாரின் தலைவிதியை மாற்ற முடியவில்லை? ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளில் பீகார் இளைஞர்களிடம் இருந்து ஒவ்வொரு வாய்ப்பையும் ஒவ்வொரு கனவையும் பாஜ-ஐக்கிய ஜனதா தளம் பறித்து விட்டது. இதனால் பீகாரிகள் தொழிலாளர்களாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பீகாரின் சுயமரியாதையை மீட்டெடுக்க, இது மாற்றத்திற்கான நேரம்’’ என்றார்.
* நவ.18ல் முதல்வராவேன் தேஜஸ்வி யாதவ் அதிரடி
இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘நவம்பர் 14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதைத் தொடர்ந்து நவம்பர் 18ம் தேதி முதல்வராக நான் பதவியேற்பேன். பின்னர், நவம்பர் 26 முதல் டிசம்பரம் 26 வரை கர்மா காலமாக இருக்கும். அதில் அனைத்து குற்றவாளிகளும், அவர்களின் சாதி, மதம் எதுவும் பார்க்கப்படாமல், சிறையில் தள்ளி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
