தேர்தல் நெருங்குது...அறிவிப்பு வரும்... ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்: அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு
* மாதர் சங்கத்தினர் கடும் கண்டனம், போராட்டம் அறிவிப்பு
விழுப்புரம்: தேர்தலில் ஓட்டுபோட்டால் ஆளுக்கு ஒரு பொண்டாட்டியை இலவசமாக கொடுப்பார்கள் என அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மாதர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். சி.வி.சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்து உள்ளனர்.
தமிழக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டவர் படுதோல்வியை சந்தித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், இந்த முறை தேர்தலில் வென்று எம்எல்ஏவாக வேண்டுமென சி.வி.சண்முகம் மும்முரமாக இருந்து வருகிறார். இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் அதிமுக கட்சியை தொடங்கிய எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டு பிரதமர் மோடி, அமித்ஷாவை புகழ்ந்து ஜிங்ஜக் அடித்து பேசியிருந்தார். மேலும் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை (ஓபிஎஸ், டிடிவி, சசிகலா) சேர்க்க மாட்டோம் என கூறி, கடுமையாக ஒருமையில் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் சி.வி சண்முகம் எம்பி, பேசுகையில், ‘பொங்கல் முடிந்ததும் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். இன்னும் மூன்று, நான்கு மாதங்கள் தான் இருக்கிறது. பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும், ஓட்டு போட்டால் இலவசமாக கொடுப்பாங்க’ என பேசினார்.
அரசு வழங்கும் இலவசத்தோடு பெண்களையும் ஒப்பிட்டு சி.வி.சண்முகம் பேசிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு மாதர் சங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறுகையில், ‘தமிழக அரசு மகளிருக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சொந்த காலில் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, சுய உதவி குழு, புதுமைப்பெண் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி பெண்கள் பொருளாதாரம் உயர்ந்துள்ள நிலையில், அவர்களை இலவசத்தோடு ஒப்பிட்டு கொச்சைப்படுத்தி பேசிய சி.வி. சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களை அவதூறாக பேசிய அரசியல்வாதிகள் பலர் பதவியை இழந்துள்ளார்கள். இதை மறந்துவிட்டு சி.வி.சண்முகம் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். நிச்சயமாக இவர் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாதர் சங்கத்தினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என தெரிவித்துள்ளனர்.