சென்னை: தேர்தல் ஆணையத்தின் அலட்சியம்; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வர வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களே. வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த உரிமை பறிக்கப்படுவதும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நிகழ்வதும் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.உத்தரப் பிரதேசம், பிகார், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர்களுக்கே தெரியாமல் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் ஒரு தொகுதியில் மட்டும் 9,850 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. தமிழர்களுக்கே தெரியாமல் டெல்லியில் அமர்ந்துள்ள ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை அழிக்கிறார் என்ற தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இவ்வாறான முறைகேடுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தாலும், தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது.முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Y. குரேஷி கூட, 'வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை விசாரிக்காமல் புறக்கணிப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும்' என வெளிப்படையாக கூறியிருப்பது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய அவமானம்.
இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமைகளை புறக்கணிப்பதால், மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். மேலும், மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்ற போக்கைத் தொடர்வது ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதலாகும்.வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். வாக்குரிமையை பறிக்க முயன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஜனநாயகத்தை காப்பதற்கான எங்கள் போராட்டம் தீவிரமாக தொடரும்.