Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் நேரத்தில் 2 முதல்வர்கள் சிறை, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம்; இந்தியாவை ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று மோடி கூறுவது பொய்: ரஷ்யா, வடகொரியா நிலைமைக்கு சென்றுவிடும் என்று எச்சரிக்கை

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் 2 முதல்வர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இருக்கையில் இந்தியாவை ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று மோடி கூறுவது பொய் என்றும், இதே நிலை நீடித்தால் அது ரஷ்யா, வடகொரியா நிலைமைக்கு சென்றுவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகள் ஒருபக்கம் இருந்தாலும், விசாரணை அமைப்புகளை கையில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளை முடக்கும் பாஜக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது. அதுவும் தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் குறித்து பேசுபவருமான ஆகார் படேல் என்பவர், பிரபல நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், ‘இந்தியாவில் நடக்கும் தேர்தலானது நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் என்ற முழக்கம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த தேர்தல் ஒரு ஏமாற்று வேலை, மோசடி என்று கூறுகிறேன். பிரதமர் மோடி, இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று கூறுகிறார். ஆனால் உண்மையில் அவர் கூறுவது பொய் மட்டுமல்ல; நகைச்சுவையும் கூட என்பது தெளிவாகிறது. இத்தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லு மற்றும் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கேற்றவாறு பிரசாரம் செய்கின்றனர்.

இதுபோன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டால், அது இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். இந்தத் தேர்தல்களில் நடக்கும் முறைகேடுகள் என்ன என்பதை ஒருவர் புரிந்து கொள்ள அதிக நேரம் யோசிக்க வேண்டியதில்லை. இன்றைய நிலையில் இரண்டு முதல்வர்கள் சிறையில் உள்ளனர். எந்த நீதிமன்றமும் அவர்களுக்கு தண்டனை வழங்கவில்லை. ஆனால் அவர்கள் சிறையில் உள்ளனர். இருவரும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஆவர். மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள விசாரணை அமைப்புகளால், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது. இவை எல்லாம் எப்படி நடக்கிறது. நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளால் நடக்கவில்லை.

மோடியின் கட்டுப்பாட்டில் விசாரணை அமைப்புகள் மற்றும் ஏஜென்சிகளின் நடவடிக்கையால் நடக்கிறது. இதுபோன்ற செயல்கள் உண்மையான ஜனநாயக நாட்டில் நடக்காது. தேர்தல் பத்திர ஊழல் குறித்து பேச வேண்டியதில்லை. உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த பின்னரே கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை வெளியிட்டனர். இந்தியா முழுவதுமாக சுதந்திரம் பெறவில்லை. ஜனநாயகம் கை நழுவிவிட்டது, சர்வாதிகாரம் போன்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்று பல சர்வதேச அமைப்புகளும் சொல்லிக் கொண்டுள்ளன.

கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் ‘வி-டெம்’ அமைப்பானது கடந்த 2018ல் இந்தியாவை தேர்தல் எதேச்சதிகாரம் கொண்ட நாடாக வகைப்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா மோசமான எதேச்சதிகார நாடுகளில் ஒன்று என்று கூறியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில், ‘எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்’ என்ற அமைப்பானது, இந்தியாவை குறைபாடுகள் கொண்ட ஜனநாயகம் என்று வகைப்படுத்தியது. மேலும் ஜனநாயக விதிமுறைகள் கடந்த 2015ம் ஆண்டு முதல் பல்ேவறு நெருக்கடிக்களுக்கு ஆளாகி உள்ளன என்று கூறியது.வாஷிங்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ என்ற அமைப்பானது கடந்த 2021ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா சுதந்திரம் அடைந்த நாடு அல்ல; பகுதியளவு சுதந்திரம் அடைந்த நாடு’ என்று கூறியது. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் கூட்டாட்சி கட்டமைப்பு உள்ளது. அதன் அடிப்படையில் பல மாநிலங்கள் ஒன்றிணைந்து ஆட்சி நடத்துகின்றன. தேசிய அளவில் தனித்தனியாகவும், சுதந்திரமாகவும் இருக்கும் கட்சிகளால் ஆளப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தால் நியாயமான தேர்தல் நடத்தப்படுகிறது. உலகின் மற்ற ஜனநாயக நாடுகளுக்கு இந்தியா ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. வெவ்வேறு கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்களைக் கொண்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு இடம் வழங்கப்படுகிறது’ என்று கூறியிருந்தது.

மோடி கூறும் புதிய இந்தியாவில் என்ன நடக்கிறது என்றால், ஜனநாயகம் மற்றும் அதன் செயல்முறைகளின் மீதான நேரடித் தாக்குதல் நடக்கிறது. இவ்வாறான நிலையில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தத் தேர்தல்கள் ரஷ்யா மற்றும் வட கொரியாவில் நடக்கும் தேர்தல்களை போன்று தான் இருக்கும். தேர்தல்களில் நம்பகத்தன்மை இருக்காது. எதிர்க்கட்சிகள் செயல்பட அனுமதிக்காத ஜனநாயக நாடான வங்கதேசம் போல் இந்தியா மாறிவிட்டது. பாகிஸ்தானிலும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜனநாயகத்தின் தாய் இந்தியா போன்ற சொற்றொடர்களை மோடி பயன்படுத்தி வருவது பொய் மட்டுமல்ல; நகைச்சுவையாகவும் உள்ளது’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் ‘வி-டெம்’ அமைப்பானது கடந்த 2018ல் இந்தியாவை தேர்தல்

எதேச்சதிகாரம் கொண்ட நாடாக வகைப்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா மோசமான எதேச்சதிகார நாடுகளில் ஒன்று என்று கூறியுள்ளது.