முதியவரிடம் இருந்து கோரிக்கை மனுவை வாங்க மறுத்த ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி: திருச்சூர் அருகே நடந்த கூட்டத்தில் பரபரப்பு
திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே நடந்த ஒரு கூட்டத்தில் வீடு கட்ட உதவ கோரி ஒரு முதியவர் கொடுத்த மனுவை ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகா என்ற பகுதியில் நட்பு சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தை பிரபல மலையாள சினிமா இயக்குனர் சத்யன் அந்திக்காடு தொடங்கி வைத்தார். கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கொச்சு வேலாயுதன் என்ற முதியவர் ஒரு கோரிக்கை மனுவுடன் அங்கு வந்தார்.
சுரேஷ் கோபியை சந்தித்த அவர், தென்னை மரம் விழுந்து தன்னுடைய வீடு சேதமடைந்து விட்டதாகவும், அதை சீரமைக்க உதவ வேண்டும் என்றும் கூறி மனுவை கொடுத்தார். ஆனால் மனுவை வாங்க மறுத்த சுரேஷ் கோபி, வீடு கட்டிக் கொடுப்பது தன்னுடைய வேலையல்ல என்றும், மாநில அரசு தான் அந்த வேலையை செய்ய வேண்டும் என்றும் கூறி முதியவரை திருப்பி அனுப்பி வைத்தார். இது அந்த முதியவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இதற்கிடையே கொச்சு வேலாயுதனுக்கு வீடு கட்டிக் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. திருச்சூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளரான அப்துல் வகாப், கொச்சு வேலாயுதனின் வீட்டுக்கு சென்று கட்சியின் சார்பில் வீடு கட்டித் தருவதாக உறுதியளித்தார்.
இந்த விவகாரம் குறித்து சுரேஷ் கோபி கூறியது: வீடு கட்டிக் கொடுப்பது மாநில அரசின் வேலையாகும். தனி ஒரு ஆளாக அதை செய்ய முடியாது என்றார்.