மதுரை: மதுரையில் ரூ.4,500த்திற்காக, முதியவரை கொலை செய்த வளர்ப்பு மகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை, ஆனையூர் கணபதி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (65). இவர், மனைவி விஜயலட்சுமி இறந்த பிறகு ஜோதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்ராதேவி (25) என்ற வளர்ப்பு மகள் உள்ளார். சித்ராதேவிக்கும், பழனிச்சாமிக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. நேற்று சித்ராதேவி மற்றும் அவரது நண்பர்களான சரத், விஜய் ஆகியோர் பழனிச்சாமி வீட்டிற்கு வந்துள்ளனர். அவரிடம் ரூ.4,500 கேட்டுள்ளனர்.
அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர். இதில் கீழே விழுந்த பழனிச்சாமி பலத்த காயமடைந்தார். இதையடுத்து மூவரும் அங்கிருந்து தப்பினர். இதற்கிடையே வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. கூடல்புதூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற சித்ராதேவி, சரத், விஜய் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
* 3 கிராம் மோதிரத்துக்காக 89 வயது முதியவரை கொன்ற வாலிபர்கள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த குடியாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னார்சாமி(89). இவர் கடந்த 13ம் தேதி காலை 7 மணி அளவில் மாரியம்மன் கோயிலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அன்று இரவு மாரியம்மன் கோயில் அருகே உள்ள காரியமேடை ஒட்டி முட்புதரில் இறந்து கிடந்தார். தூசி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நெஞ்சு பகுதியில் எலும்பு உடைக்கப்படும், கழுத்து எலும்பு நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகள் வைத்து தீவிர விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார்(19), தினேஷ்(21) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்ததில், சம்பவத்தன்று முதியவரை வழிமறித்து அவரது மார்பில் எட்டி உதைத்தும், கழுத்து நெரித்தும் கொன்று விட்டு 3 கிராம் மோதிரத்தை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


