நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, பஸ் நிலைய ரவுண்டானாவிலிருந்து நேற்று, மதுரை சாலை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்றது. பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில் எதிர்திசையில் திடீரென அந்த கார் அதிவேகமாக சென்று எதிரே வந்த 2 கார்கள் மற்றும் சாலை ஓரம் நின்ற 6 டூவீலர்கள் மீது தொடர்ச்சியாக மோதியது. மேலும், அப்பகுதியில் மருந்து கடையில் மருந்து வாங்கி விட்டு சாலையோரம் சென்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீதும் கார் பயங்கரமாக மோதி, சுமார் 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்றது. இதில் அவர் உயிரிழந்தார். இதை பார்த்து சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் டிரைவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து செம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பழைய செம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்(27) என்பவர் போதையில் கார் ஓட்டி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தப்பிய இருவரை தேடுகின்றனர்.
+
Advertisement

