சாலையை கடந்த மூதாட்டி பலி; லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய டீசல்: கேன், பாத்திரங்களில்பிடித்து சென்ற மக்கள்
திருவண்ணாமலை: டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய டீசலை பிடிக்க மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் மூதாட்டி பலியானார். திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி டீசல் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி சென்றது. திருவண்ணாமலை அடுத்த தென்னரசம்பட்டு கிராமம் அருகே வந்தபோது மூதாட்டி ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், அவர் மீது ேமாதாமல் இருக்க லாரியை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று மூதாட்டி மீது மோதிவிட்டு சாலையோரம் கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனிடையே டேங்கர் லாரியில் இருந்த டீசல் தரையில் கொட்டியதால் அப்பகுதி மக்கள் வந்து கேன்கள், பாத்திரங்களில் டீசலை பிடித்து சென்றனர். மூதாட்டி இறந்துகிடப்பது பற்றி அவர்கள் எந்தவித கவலையும் படவில்லை. விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கீழ்பென்னாத்தூர் போலீசாரும் திருவண்ணாமலை தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது டீசல் பிடித்துக்கொண்டிருந்த பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன்பின்னர் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.


