Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈகுவார்பாளையம் ஊராட்சியில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: ஈகுவார்பாளையம் ஊராட்சியில் உள்ள குமரன்நாயக்கன் பேட்டை வெக்காளியம்மன் கோயிலின் 19ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமரன்நாயக்கன் பேட்டையில் வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு 19ம் ஆண்டு நவச்சண்டியாகம் மற்றும் தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த நிகழ்வை ஒட்டி வெள்ளிக்கிழமை தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் இதனை தொடர்ந்து, சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ண லீலா தெருக்கூத்தும் நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, காப்பு கட்டிய பக்தர்கள் 800 பேர் வேப்பிலை அணிந்து நாவேல் தரித்து ஆலயத்தை வலம் வந்தனர். பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கினர். இந்த தீமிதி திருவிழாவை காண முன்னாள் அதிமுக நாடளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், வெக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தீமிதி விழாவிற்கான, வெக்காளியம்மன் கோயில் நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், பாபு மற்றும் நிர்வாக அதிகாரி சுதாகர் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர். தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.