எழும்பூர் ரயில் நிலையம் சீரமைப்பு பணி; உழவன், அனந்தபுரி, சேது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி காரணமாக உழவன், அனந்தபுரி, சேது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது, நாளை முதல் வரும் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் காரணமாக, விரைவு ரயில்களின் செயல்பாடுகளில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இந்த மாற்றங்கள் நவம்பர் 10 முதல் நவம்பர் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தஞ்சாவூர் -எழும்பூர் இடையே இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் (எண் 16866) தஞ்சாவூரில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். இந்த ரயில் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூருக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
கொல்லம் - எழும்பூர் அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் (எண் 20636) கொல்லத்தில் இருந்து பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு அதிகாலை 5.20 மணிக்கு வந்தடையும்.
ராமேஸ்வரம் - எழும்பூர் சேது சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் (எண் 22662) ராமேஸ்வரத்தில் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 6.35 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
ராமேஸ்வரம் - எழும்பூர் விரைவு ரயில் (எண் 16752) ராமேஸ்வரத்திலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு அதிகாலை 6.45 மணிக்கு வந்தடையும். இவை நவம்பர் 10 முதல் நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும்.
அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட வேண்டிய எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில் (எண் 16865) தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்திற்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் (எண் 20635) நவம்பர் 11 முதல் 30 வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சேது சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் (எண் 22661) நவம்பர் 11 முதல் 30ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில் (எண் 16751) நவம்பர் 11 முதல் 30ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் - மும்பை சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் (எண் 22158) நவம்பர் 11 முதல் 30ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும். இவை நவம்பர் 11 முதல் நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும்.
அதேபோல், சென்னை எழும்பூர் - குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (எண் 16127/16128) அடுத்த அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து தொடர்ந்து புறப்பட்டு/ முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

