நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், சுமார் 1500 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 8 கோடி கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் சுமார் 6.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. தற்போது குளிர்காலம் துவங்கியுள்ளதால், முட்டை விற்பனை நாடு முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் கடந்த 4ம்தேதி முதல், முட்டை விலையில் தினமும் 5 காசுகள் என்இசிசி உயர்த்தி வந்தது.
இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் முட்டை விலை நிர்ணய குழு கூட்டம், என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தி, ஒரு முட்டையின் விலை 595 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் உச்சபட்ச விலையாகும். கடந்த ஆண்டு டிசம்பரில், ஒரு முட்டையின் விலை அதிகபட்சமாக 590 காசாக இருந்தது.
அதன் பின்னர், தற்போது 595 காசாக முட்டை விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் முட்டையின் விலை ரூ.7 வரை உயந்துள்ளது. முட்டை விலை உயர்வு குறித்து, நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ் கூறுகையில், வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் முட்டை விற்பனை அதிகரிப்பு, வெளிநாடு ஏற்றுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் முட்டை விலை உயர்ந்து வருகிறது என்றார்.


