மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க முயற்சி எகிப்தில் காசா அமைதி ஒப்பந்த மாநாடு: ஒன்றிய அமைச்சர் கே.வி.சிங் பங்கேற்பு
புதுடெல்லி: எகிப்து நாட்டின் செங்கடல் நகரமான ஷர்ம் எல்-ஷேக் நகரில் இன்று காசா அமைதி ஒப்பந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. எகிப்து அதிபர் அப்தல் ஃபத்தா அல்-சிசி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த காசா அமைதி ஒப்பந்த மாநாட்டில் ஐநா பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரஸ், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதேபோல் இந்திய பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடப்பட்டது.
ஆனால் காசா அமைதி ஒப்பந்த மாநாட்டில் ஒன்றிய இணைஅமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பார் என அறிவிப்பு வௌியாகி உள்ளது. இந்த மாநாடு, காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதையும், மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை மீட்டெடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு, பாலஸ்தீனர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி வர தொடங்கி உள்ள நிலையில், இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.