*பாடங்கள் குறித்த கேள்விகள் கலெக்டர் கேட்டறிந்தார்
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் மணக்கரம்பை மற்றும் கண்டியூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முறை குறித்தும், புதிய வகுப்பறை கட்டுவது தொடர்பாகவும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, திருவையாறு ஊராட்சி ஒன்றியம் கல்யாணபுரம் 2ம் சேத்தியில் ரூ.2.65 லட்சம் மதிப்பீட்டில் நர்சரியில் மரக்கன்றுகள் நடவு செய்முறை பற்றியும், அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர், பசுபதி கோவிலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது தாசில்தார் முருககுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, கீதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் வெற்றிச்செல்வன் உடனிருந்தனர்.இதனை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்கினர்.
இதில் 106 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இம்முகாமில் 196 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால் அவய 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.44 லட்சம் மதிப்பில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் செயற்கை கால் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் அளவீடு எடுக்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் அருள்பிரகாசம் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.