மாபெரும் கல்வி எழுச்சி, வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பெற்றுள்ளதற்காக தமிழ்நாடு மக்கள் பெருமைப்பட வேண்டும்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பாராட்டு
சென்னை: ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடத்திய மாபெரும் நிகழ்ச்சி அரசின் சாதனையை மட்டும் கூறாமல் மாநிலத்தின் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றங்கள் மற்றும் செயல்படுத்தப்படும் முன்னோடித் திட்டங்களையும் பொதுவெளிக்குக் கொண்டுவரும் ஒரு தளமாகவும் அமைந்தது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நிகழ்த்திய மாபெரும் புரட்சி பள்ளிக் குழந்தைகள், பெற்றோர், திரைப் பிரபலங்கள் உணர்ச்சி பொங்க மேடையிலே பேச்சு, அதிர்ந்த அரங்கம், நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்வே முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் நிகழ்த்திய மாபெரும் புரட்சியைப் பற்றியதாக அமைந்திருந்தது. மேடையிலேயே காலை உணவுத் திட்டத்தில் சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் சாம்பாரின் சுவையைத் தொகுப்பாளர் திவ்யதர்சினியும், அமைச்சர் மதிவேந்தனும் மேடையிலேயே ருசித்துப் பார்த்த நிகழ்வுகள் அற்புதமாக இருந்தன.
நான் முதல்வன் திட்டம் மூலமாகப் பயன் பெறும் மாணாக்கர்கள் வரவழைக்கப்பட்டனர். மேடையில் பேசிய ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் நான் முதல்வன் திட்டம் கொடுத்த வாய்ப்பும் ஊக்கமும் உண்மையிலேயே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நான் முதல்வன் திட்டத்தின் மூலமாகப் பயனடைந்த மாணவி பிரேமா பேசுகையில், அவருடைய பேச்சைக் கேட்டு ஒட்டுமொத்த பார்வையாளர்கள் மட்டுமின்றி, முன் வரிசையில் அமர்ந்திருந்த முக்கிய விருந்தினர்களும் கண்கலங்கினர்.
இயக்குனர் தியாகராஜா குமாரராஜா பேசிய, கை, கால்களைக் கட்டிக் கடலில் தூக்கி எறிந்து ஒன்றிய அரசு வஞ்சித்தாலும் தானும் நீந்தி தன் மக்களைக் காப்பாற்றி வரும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி என்று குறிப்பிட்டது கைதட்டல்களால் அரங்கத்தையே அதிரச் செய்தது. விளையாட்டுத்துறையில் சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கிற மாணவர்கள் மேடையேறினார்கள்.
பணம் படைத்தவர்கள் மட்டும் தான் விளையாட்டில் சாதிக்க முடியும் என்ற நிலையை மாற்றி, சாதாரண குக்கிராமத்தில் பிறந்த எவரும் சாதிக்கலாம் என்ற நிலை இன்றைக்கு விளையாட்டுத்துறை மூலம் உருவாகியிருக்கிறது. புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் வாயிலாக மாதம் தோறும் ரூ.1000 பெற்று வரும் மாணவ, மாணவிகள் மேடைக்கு வந்தனர்.
வெறும் ஆயிரம் ரூபாய் ஒரு மாணவியின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விடப்போகிறது என்ற எக்காளப் பேச்சுக்குப் பதில் அளிக்கும் விதமாக தஞ்சையைச் சேர்ந்த மாணவி ரம்யாவின் பேச்சு அமைந்திருந்தது. சுப்புலட்சுமியின் பேச்சைக் கேட்ட முதல்வர் நேரடியாகத் தம்மிடம் அழைத்து அவருடைய சட்டைப் பையில் இருந்து ஒரு பேனாவை அந்த மாணவிக்குப் பரிசளித்தார்.
தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி அந்த மாணவியின் தலையை அன்பாக தடவிக்கொடுக்க, நம்முடைய முதல்வர் ஒரு தந்தையின் இடத்தில் இருந்து நான் இருக்கிறேன் எதற்கும் கலங்காதே நீ நன்றாகப் படி என்ற நோக்கி அந்த மாணவியை நெற்றியில் முத்தமிட்டு உச்சிமுகர்ந்தது நெகிழ்வான தருணமாக இருந்தது. பேரறிஞர் அண்ணா போன்றவர் முதல்வர் என்றார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவுத்திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை எல்லாம் நம்முடைய முதல்வர், திராவிட மாடல் அரசு இன்றைக்கு வழங்கி இருக்கின்றது.
இந்த திட்டங்களை எல்லாம் யாராவது ஒரு நாள் என்றைக்காவது மாற்றிவிடலாம் என்று நினைத்தால் கூட அவர்களுடைய மனதிலும் நிச்சயம் பயம் வரும். அந்த பயம் இருக்கின்றவரைக்கும் இந்தத் தமிழ்நாட்டை ஆளுகிறவர் நம்முடைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்று பொருள் என்று குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், தமிழ்நாடு கல்வியிலும், விளையாட்டிலும் மிகச் சிறந்து விளங்குகிறது. காலை உணவு திட்டம் ஈடு இணையற்ற திட்டம்.
ஏழை எளிய மக்களின் நலனுக்காக இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இதைப் பார்த்ததும் நான் ஒரு முடிவு செய்து விட்டேன். தெலங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதலாக, காலை உணவு திட்டத்தை நாங்களும் செயல்படுத்தப் போகிறோம். எனது இனிய நண்பரான மு.க.ஸ்டாலின் இருந்து இந்தத் திட்டத்தை எடுத்துக் கொள்கிறேன்.
நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதார பாராட்டுகிறேன். தமிழ் மக்களாகிய நீங்கள், இப்படியொரு சிறந்த முதலமைச்சர் கிடைத்ததற்காக பெருமைப்பட வேண்டும். தெலங்கானாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் இருப்பதை போலவே 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தப் போகிறேன் என்று பேசினார்.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி, மாநிலத்தின் கல்விச் சாதனைகளை ஆவணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அரசுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் ஒரு தளமாகவும் அமைகிறது.
ஒவ்வொரு குழந்தையும், எந்தப் பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும், தன் முழு ஆற்றலையும், ஆளுமையையும் கட்டவிழ்த்து, வாய்ப்புகளை வென்றெடுக்கவும் வழிவகை செய்யும் மகத்தான சமூக நீதித் தத்துவத்தின் வெளிப்பாடே, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற இந்த மிகச் சிறந்த முழக்கம்.
* ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி, மாநிலத்தின் கல்விச் சாதனைகளை ஆவணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அரசுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் ஒரு தளமாகவும் அமைகிறது.